Published : 18 Dec 2018 12:21 PM
Last Updated : 18 Dec 2018 12:21 PM

பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்மொழிந்தது ஏன்? - ஸ்டாலின் விளக்கம்

ஜனநாயகம் காத்திட ராகுல் காந்தியின் கரத்தை தோழமைக் கட்சிகள் இணைந்து வலுப்படுத்த வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "தென்திசை நோக்கி இந்தியாவின் திருமுகத்தைப் பல முறை திரும்பிடச் செய்த தலைவர் கருணாநிதி மறைந்து 125 நாட்கள் கடந்த நிலையிலும், தன் திருவுருவச் சிலை திறப்பு விழாவின் வாயிலாக இந்திய அரசியலின் ஒட்டுமொத்தப் பார்வையையும் தமிழ்நாட்டை நோக்கித் திருப்பிவிட்டார். அறிவாலயத்தின் வாயிலில் அண்ணாவும், தலைவரும் நிற்பது மாலை அணிவித்து, மலர் தூவி வணங்குவதற்காக மட்டுமல்ல, பெரியார் வழி நின்று அவர்கள் உருவாக்கிய திமுகவை, அதன் கொள்கைகளை எந்நாளும் கட்டிக்காத்திட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலேதான் இருவரின் சிலைகளும் அருகருகே அமைந்துள்ளன. அந்தச் சிலைகளைக் காணும்தோறும் திமுகவும் அதன் கொள்கைகளும் நம் நெஞ்சில் விளைந்திட வேண்டும்; விழிப்புற்றிட வேண்டும்.

எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அப்போது அதனைக் கச்சிதமாகச் செய்வதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் தலைவர். அவர் சிலையாக மட்டுமல்ல, நம் சிந்தனையிலும் நிறைந்திருப்பதால் தான், உங்களில் ஒருவனான நான் அந்தச் சிலை திறப்பு விழா மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிடும் போது, மத்தியிலே நடைபெறும் 'சேடிஸ்ட் மோடி' தலைமையிலான  பாசிச- நாசிச ஆட்சியை வீழ்த்திட ராகுல் காந்தியை முன்னிறுத்தி, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்பதைப் பிரகடனப்படுத்தினேன்.

இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து – மதநல்லிணக்கத்தைச் சிதைத்து - பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் தகர்த்துக் கொண்டிருப்பதுடன், தமிழ்நாட்டை ஒட்டுமொத்தமாக வஞ்சிக்கும் மோடி அரசை வீழ்த்திட வேண்டுமென்றால் அதற்குரிய வலிமை கொண்டவரும், பாஜகவின் கோட்டையாக இருந்த மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமையக் காரணமாக அமைந்தவருமான ராகுல் காந்தியை முன்னிறுத்துவது தான் மதச்சார்பற்ற சக்திகளின் ஒருங்கிணைப்புக்கு ஏற்றதாக இருக்கும் என்ற அடிப்படையிலே உரக்கச் சொன்னேன். தலைவர் காட்டிய வழி, நேரு குடும்பத்தில் இந்திரா காந்தியில் தொடங்கி இன்றுவரை நல்ல நட்பினைக் கொண்டுள்ளது திமுக.

ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக நின்றுள்ளது. அந்த ஆதரவும் எதிர்ப்பும் நாட்டின் நலன் கருதியே எடுக்கப்பட்டவை. இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வங்கிகள் நாட்டுடைமை, மன்னர் மானியம் ஒழிப்பு போன்ற முற்போக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டபோது, அவர்கள் பக்கம் இருந்த பழமைவாதிகளே அதனை எதிர்த்த நிலையில், அவை நிறைவேற துணை நின்ற இயக்கம்தான், திமுக. அதுபோலவே, 1980 ஆம் ஆண்டு இந்தியாவில் நிலையான ஆட்சி அமைவதற்கு காங்கிரஸால் தான் முடியும் என்ற போது, அதற்கு முந்தைய தேர்தலில் பெருந்தோல்வி அடைந்திருந்த இந்திரா காந்தி அரசியல் களத்தில் மீண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்த சூழலில், 'நேருவின் மகளே வருக.. நிலையான ஆட்சி தருக..' என முழங்கி அது வெற்றிகரமாக நிறைவேற துணை நின்றவர் தலைவர்.

2004 ஆம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனநாயக ஆட்சி அமைந்திட வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையை ஏற்பது குறித்து அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தபோது, 'இந்திராவின் மருமகளே வருக.. இந்தியாவின் திருமகளே வெல்க!' என முதன்முதலாக அவர் பக்கம் நின்று முழங்கியவர் தலைவர். அதன் பின்னர் தான், அகில இந்திய கட்சிகள் பலவும் அணிவகுத்தன. அந்தத்தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

தயக்கத்தை உடைத்து, மயக்கத்தைத் தெளிவித்து, மதவெறியின் பிடியிலிருந்து நாடு விடுபட்டு ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டுமென்றால் இன்றைய நிலையில் இந்திய தேசிய காங்கிரஸின் இளந்தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டியுள்ளது. பாசிசத்தை எதிர்த்து நிற்கும் ஜனநாயகப் படையினை ஒருங்கிணைத்து நெறிப்படுத்த வலுவான தலைமை என்ற அடிப்படையில் தான் ராகுல் காந்தியை முன்மொழிந்துள்ளேன்.

மதவெறியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வு கொண்ட தோழமை சக்திகள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தற்போதைய சூழலில் இது குறித்து தோழமைக் கட்சிகளுக்குள் விவாதங்கள் ஏற்படலாம். ஜனநாயகத்தில் விவாதங்கள் வழியே தான் விடிவுகள் பிறந்துள்ளன. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இருண்டு கொண்டிருக்கும் இந்தியா விடிவு பெற, இந்த விவாதங்கள் கூட நல்ல விளைவுகளை உண்டாக்கும். ஜனநாயகம் காத்திட ராகுலின் கரத்தை வலுப்படுத்துவோம். நாசக் கரத்தை வீழ்த்திட நேசக் கரங்களாய் இணைவோம்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x