பொன் மாணிக்கவேல் செய்த இடையூறு; உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவே இல்லை: ஏடிஎஸ்பி இளங்கோ பேட்டி

பொன் மாணிக்கவேல் செய்த இடையூறு; உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவே இல்லை: ஏடிஎஸ்பி இளங்கோ பேட்டி
Updated on
2 min read

சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் தங்களுக்கு கொடுத்த இடையூறு காரணமாக உண்மையான குற்றவாளிகளை கைது செய்யவே இல்லை என சிலைக்கடத்தல் தடுப்பு ஏடிஎஸ்பி இளங்கோ குற்றம்சாட்டினார்.  

சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தப்பின் செய்தியாளர்களின் சரமாரி கேள்விக்கு இளங்கோ பதிலளித்தார். 333 வழக்குகளில் ஓராண்டாக எதுவும் செய்ய தங்களை அனுமதிக்கவில்லை, 3 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அவரது பேட்டி:

அறநிலையத்துறை அதிகாரிகளை எல்லாம் கைது செய்துள்ளீர்கள் அதில் என்ன மாதிரி பிரச்சினைகள் வந்துள்ளது?

அவையெல்லாம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. அதைப்பற்றி வெளியே சொல்ல முடியாது. அதனால்தான் நான் ஏற்கெனவே ஒரே வரியில் சொன்னேன். பழைய வழக்குகளில்  பல வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.  சிலைகள் காணாமல் போனது கேள்வி கேட்கிறீர்கள்.

பந்தநல்லூர் வழக்கை உதாரணமாக சொல்கிறேன். அங்கு 7 சிலைகள் காணாமல் போனது மாற்றப்பட்டது. அந்த வழக்கில் அங்குள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார்கள். அப்படியானால் சிலைகள் எங்கே போனது, யார் எடுத்துச் சென்றது. குற்றவாளிகள் யார் அதைக்கண்டுபிடிக்க முயற்சி எடுத்தோமா? எதுவுமே எடுக்கவில்லை.

பொன்மாணிக்கவேல் பல ஆண்டுகள் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் அதிகாரியாக இருந்துள்ளார், இப்போது மட்டும் ஏன் புகார் அளிக்கிறீர்கள்?

அதைத்தான் நாங்கள் முன்னரே சொன்னோம். இவ்வளவு பிரச்சினைகள் இருந்தது. அன்று எதிர்ப்பை தெரிவித்தோம் ஆனால் அதை கேட்காததால் இதுபோன்ற அதிகாரிகள் மனம் நொந்து ஒதுங்கிவிட்டனர். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. அன்று ஒரு டிஐஜியோ, எஸ்பியோ இருந்திருந்தால் அவர்களிடம் எங்கள் குறைகளை போய் சொல்லியிருப்போம். சாதாரண அலுவலர்களாகிய நாங்கள் ஐஜியிடம் போய் எதுவும் சொல்ல முடியாது.

அதனால்தான் இந்த நிலையில் இப்போது வருகிறோம். இப்ப இவர் சிறப்பு அதிகாரியாக இருக்கும்போது ஸ்பெஷல் ஆஃபிசர் இருக்கும்போது அவருக்கு எதிராக யாரிடம் போய் புகார் கொடுக்க முடியும்? ஒவ்வொரு விஷயத்துக்கும் நீதிமன்றத்துக்கு போகவா முடியும்?

பொன்மாணிக்கவேல் சிலை கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்கத்தானே முயற்சி எடுத்தார்?

அவர் எந்த வழக்கிலும் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கையே எடுக்கவில்லையே? 333 வழக்குகளை கண்டுபிடிக்கச்சொல்லித்தான் உத்தரவு. அந்த வழக்கில் எத்தனை குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள், எத்தனை சிலைகளை கைப்பற்றியுள்ளார்கள். அதுதான் எங்கள் வருத்தமே.

47 குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக ரிப்போர்ட்டே வந்துள்ளதே?

மொத்தமே மூன்று வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனால்தான் நாங்கள் சொல்கிறோம். நியாயமாக விசாரிக்கவேண்டும். உயர் நீதிமன்றத்தில் , உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எல்லாவற்றையும் வெளிப்படையாக வெளியில் சொல்ல முடியாது.

அதனால்தான் நாங்கள் சொல்கிறோம், எங்களை நிர்பந்தப்படுத்தியதை விசாரிக்கணும், அதற்கான விசாரணை வரட்டும். சிபிஐயோ வேறு அமைப்போ விசாரிக்கணும். ஏதாவது ஒரு அமைப்பு வந்து விசாரிக்கட்டும்.

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் கைதானவர்கள் குற்றவாளிகள் இல்லையா?

நாங்கள் அப்படிச்சொல்ல முடியாது. ஏற்கெனவே சொல்லிவிட்டோமே, நிர்பந்தப்படுத்தப்பட்டோம். அக்யூஸ்டை கொடுத்து ரிமாண்ட் பண்ண சொல்வார்கள் என்கிறோமே. அனைத்தையும் வெளியில் சொல்லமுடியாது.

நீங்கள் நேற்று கொடுத்த புகாரில் முறையான விசாரணை இல்லாமல் வழக்குப்பதிவு செய்ய சொன்னார் என்று புகார் அளித்துள்ளீர்கள் எந்த வழக்கில் அவர் அப்படி நிர்பந்தித்தார்?

அதை நாங்கள் சொல்லவேண்டிய இடம் ஊடகமல்ல,  நீதிமன்றத்தில் தான் சொல்ல முடியும். அதைத்தான் எங்களை நிர்பந்தப்படுத்தி வழக்குப்போடச் சொன்னார் என்று சொல்கிறோம்.

நீங்கள் ஸ்பெஷல் டீமில் இருந்தபோது உங்களுக்கு மேல் ஏடிஜிபி இருந்தார் அவரிடம் புகார் அளித்திருக்கலாமே?

அதைத்தான் நாங்கள் சொல்கிறோமே பொன்மாணிக்கவேலே மேலதிகாரியிடம் ரிப்போர்ட்செய்ய மாட்டார் அப்புறம் எப்படி நாங்கள் மேலதிகாரியை அணுக முடியும்.

இவ்வளவு நாளாக வெளிவராமல் இப்போது வருவதேன்?

இவ்வளவு நாட்களாக அவர் போலீஸ் ஐஜியாக இருக்கும்வரை போராடிப்பார்த்தோம். இப்ப அவர் சிறப்பு அதிகாரி நாங்கள் போலீஸ், எங்கள் குறைகளை யாரிடம் சொல்ல முடியும். எங்கள் குறைகளை கேட்க யார் இருக்கிறார். அதனால்தான் இப்ப எங்கள் மேலதிகாரியிடம் புகார் கொடுக்கிறோம்.

நேரடியாக கோர்ட்டில் புகார் அளிக்கலாமே?

நாங்கள் நேரடியாக புகார் அளிக்க முடியாது. போலீஸ் டிபார்ட்மெண்டில் ஒழுக்க நடைமுறை உள்ளது. உத்தரவுக்கு பணிய வேண்டும். அந்த அடிப்படையில்தான் இவ்வளவு நால் போராடினோம். இப்ப அவர் சிறப்பு அதிகாரி, அதனால் எங்கள் மேலதிகாரியிடம் புகார் தெரிவிக்கவேண்டும் என்கிற அடிப்படையில் புகார் அளிக்கிறோம்.

டிஜிபியைவிட ஐஜி பெரிய அதிகாரியா?

அவர் சிறப்பு அதிகாரி, அவர் ரிப்போர்ட்டை நீதிமன்றத்தில் அளிப்பார். நாங்களும் நீதிமன்றத்தில்தான் எங்கள் குறைகளை சொல்லணும், நாங்கள் அப்படி போக முடியுமா? எங்கள் மேலதிகாரி டிஜிபி அதனால் இங்கு வந்துள்ளோம்.

புகாரின் பின்னணியில் யாராவது அதிகாரிகள் உள்ளனரா?

கிடையவே கிடையாது. இப்படியெல்லாம் கேட்பீர்கள் என்பதால்தான் பாதிக்கப்பட்ட அதிகாரிகளே நேரில் வந்துள்ளார்கள். அவரிடமே நீங்கள் கேட்கலாம்.

இவ்வாறு ஏடிஎஸ்பி இளங்கோ தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in