

மேகேதாட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் போதிய அழுத்தம் தரப்படும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் உள்ள செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் சமூக நலத்துறை சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் முதியோர் இல்லங்களில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு நிமோனியா தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முதியோர்களை பாதுகாக்க சட்ட பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது?
முதியோர்களை பாதுகாக்க போதுமான சட்டம் உள்ளது. இருந்தாலும் சமூகத்தில் மன மாற்றம் என்பது மிகவும் அவசியம். பெற்றோரை காப்பதே தமது வாழ்நாள் கடமை என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். அப்படி உணர்ந்தால் தான் முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு. அதற்காக சமூக நலத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமும் உள்ளது.
மேகேதாட்டு அணை திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதே?
இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் ஆலோசித்து மாநில நலன், விவசாய நலனுக்கு ஏற்ப முடிவு எடுப்பார்.
மேகேதாட்டு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எந்த அளவுக்கு அழுத்தம் தரப்படும்?
திமுக முந்தைய காங்கிரஸ் அரசுடன் கூட்டணியில் இருந்தபோது, எவ்வளவு பிரச்சினைகளை வேண்டுமானாலும் சரி செய்திருக்கலாம். ஆனால், பிரச்சினைகளை தீர்க்காமல் இன்னும் அதிகப்படுத்தினார்கள். நாடாளுமன்றம் சிறந்த அமைப்பு. தேவையான அறிவுரைகளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் வழங்கியுள்ளனர். திமுகவை போல் சந்தர்ப்பவாதம் இன்றி உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தளவில் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பிரதிபலித்து உரிமையை நிலைநாட்டுவோம்.
தமிழிசை கூறிய வெற்றிகரமான தோல்வி என்றால் என்ன?
'ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட் டெட்' என சொல்லுவார்கள். சொன்னவர்களிடம் தான் அதன் அர்த்தத்தைக் கேட்க வேண்டும். இது வேறு மாநில தேர்தல். 2019 நாடாளுமன்ற தேர்தல், தமிழக சட்டப்பேரவை தேர்தல், இடைத்தேர்தல் என எல்லா தேர்தல்களிலும் அதிமுக தான் ஜெயிக்கும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.