Published : 26 Dec 2018 06:27 PM
Last Updated : 26 Dec 2018 06:27 PM

பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உரிய சிகிச்சை,  அரசு வேலை: 3 ஊழியர்கள் இடைநீக்கம்: தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவிப்பு

எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு தேவையான சிகிச்சை மற்றும் தகுதிக்கேற்ற வேலை வழங்கப்படும் என எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்க திட்ட இயக்குனர் செந்தில்ராஜ் வெளியிட்ட அறிக்கை:

“விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனை இரத்த வங்கியில் டிசம்பர் மாதம் 3-ம் தேதி கர்ப்பிணி பெண் ஒருவருக்கு இரத்த பரிமாற்றம் செய்தபொழுது எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது என்ற புகார் எழுந்துள்ளது தொடர்பான விளக்கம்.

கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி சிவகாசி அரசு இரத்த வங்கியில் 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இரத்த தானம் செய்தார். அவரது இரத்தம் சிவகாசி அரசு இரத்த வங்கியில் அனைத்து சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்ட பின்னரே டிசம்பர் 3-ம் தேதி சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு பரிமாற்றம் செய்யப்பட்டது.

இரத்த பரிமாற்றத்திற்கு பிறகு அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு காய்ச்சல், தலைவலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக

கூறியதை தொடர்ந்து டிசம்பர் 17-ம் தேதி சாத்தூர் நம்பிக்கை மையத்தில் இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டு, அந்த பெண்ணிற்கு எச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்மணிக்கு எச்.ஐ.வி தொற்று இரத்தப்பரிமாற்றத்திற்கு பிறகுதான் நேர்ந்ததா? என்று கண்டறிய விருதுநகர் மாவட்ட இணை இயக்குநர் (மருத்துவம்) டாக்டர். மனோகரன் அவர்களால் டிசம்பர் 24-அன்று முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது.

அந்த முதற்கட்ட ஆய்வில், தமிழ்நாடு மாநிலஎய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தை சேர்ந்த துணை இயக்குனர் துணை இயக்குநர் (சுகாதாரம்) பழனிசாமி மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் சண்முகராஜி உடன் இருந்தனர். இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட  பெண்மணி உட்பட சிவகாசி இரத்த வங்கி மருத்துவ அலுவலர், சிவகாசி இரத்தவங்கி ஆய்வக நுட்புநர் சிவகாசி ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்தல் மற்றும் நம்பிக்கை மையத்தின் ஆய்வக நுட்புநர், ஆலோசகர், விருதுநகர் மாவட்டத்தின் மாவட்ட எய்ட்ஸ் தடுப்புஅலுவலர் ஆகியோர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் வளர்மதி, கணேஷ் ரமேஷ்  ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ள மதுரை மாவட்ட இரத்த பரிமாற்று அலுவலர் மற்றும் இராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையின் முதுநிலை இரத்த வங்கி அலுவலர் சிந்தா

தலைமையில் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழு சிவகாசிக்கு அனுப்பப்பட்டு தற்பொழுது விரிவான ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக  முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  மக்கள் நல்வாழ்வுத்துறை செயலரை தொடர்புக்கொண்டு

தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு ஆணையிட்டதை தொடர்ந்து  சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தற்பொழுது சிவகாசியில் கள ஆய்வு / நேரடி விசாரனை மேற்கொண்டு வருகிறார்.

இதனிடையில் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி அன்றே எச்.ஐ.வி-க்காக கூட்டு மருந்து சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எச்.ஐ.வி கிருமி முழுமையாக தடுப்பு செய்யப்பட்டு குழந்தைக்கு எந்த பாதிப்புமின்றி, பிரசவம் நடைபெற அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், குழந்தை பிரசவிக்கும் வரை பாதிக்கப்பட்ட பெண்மணியை தொடர்ந்து கண்காணிக்கவும், பிரசவத்தின்போது அனைத்து உடன் நலமான குழந்தையை பெற்றெடுப்பதை உறுதி செய்ய விருதுநர் மாவட்ட இணை இயக்குநர் (மருத்துவம்) அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. விரிவான அறிக்கையினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு தகுதிகேற்ற வேலை வாய்ப்பு உள்ளிட்ட அவரது வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

மேலும் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்த ஊழியர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நிகழா வண்ணம் தடுப்பதற்கான அனைத்து முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளும் துறையால் மேற்கொள்ளப்படும்.”

இவ்வாறு திட்ட இயக்குனர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x