

கவுசல்யாவின் மறுமணத்துக்கு சங்கரின் பாட்டி மாலை எடுத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்டு தன் கணவர் சங்கரை இழந்த கவுசல்யா, சாதியின் கொடுமையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். கணவர் சங்கரின் நினைவாக சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் கவுசல்யா கோவை வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு கலையக ஒருங்கிணப்பாளருமான சக்தியை சாதி மறுப்பு மறுமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் கோவையில் உள்ள தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று எளிமையாக நடந்து முடிந்தது. சங்கரின் பாட்டி, மாலை எடுத்துக் கொடுக்க, அதை சக்தியும் கவுசல்யாவும் வாங்கி மாலை மாற்றிக் கொண்டனர்.
சாதி ஆணவப் படுகொலையால் சங்கர் இறந்த நிலையில், அவரது தந்தை வேலுச்சாமி, பாட்டி ஆகியோர் முன் நின்று கவுசல்யாவுக்கு மறுமணம் செய்து வைத்து வாழ்த்திய தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனந்தக் கண்ணீரோடு கவுசல்யா சங்கர் குடும்பத்தினரிடம் வாழ்த்துகளைப் பெற்றார். பின்னர் பறை இசை முழங்க சக்தியும், கவுசல்யாவும் இல்லற உறுதிமொழியை ஏற்றனர்.