Published : 01 Dec 2018 02:44 PM
Last Updated : 01 Dec 2018 02:44 PM

கஜா பாதித்த பகுதிகளில் தரமற்ற மின் கம்பங்கள்; வெள்ளை அறிக்கை வெளியிடுக: தினகரன்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தரமற்ற கான்கிரீட் மின் கம்பங்களைப் பயன்படுத்துவதாக, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில், புயுல் அடித்த நாள்முதல் இன்றுவரை மெத்தனப்போக்குடனும், வெறுப்புடனும் புனரமைக்கும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செய்துவருவதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

இந்த வேதனைக்கு இடையிலும், ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழக மின்வாரிய ஊழியர்களோடு சேர்ந்து மற்ற மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள மின்துறை ஊழியர்கள் இரவு பகல் பாராது மெச்சத்தக்க பணிகளைச் செய்துவருவது பாராட்டக்குரியது.

இந்நிலையில், சேதமடைந்த லட்சக்கணக்கான மின் கம்பங்களுக்கு மாற்றாக, தற்போது வாங்கப்பட்டுள்ள கான்கிரீட் மின் கம்பங்கள் தரமில்லாமல் இருப்பதை ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது.

அதில் கான்கிரீட் மின் கம்பங்களில் தரமற்ற இரும்பும், முறையான சிமெண்ட் கலவையும் செய்யப்படாமலும், மின் கம்பங்கள் காய்வதற்கான மூன்று மாத கால அளவுக்குப் பதிலாக இரண்டு மாத கால அளவே ஆன கம்பங்கள் வந்திறங்கியுள்ளதால், நடப்படும் போதே அவை விரிசல் விடுவதாகவும், அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக மன்னார்குடியில் மின் கம்பம் நடப்படும்போது கம்பத்தின் மேலே வேலைபார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

மின்சாரத்துறைக்கு 200 கோடி ரூபாய் மத்திய அரசு உடனடியாக வழங்கியிருக்கிறது என்று சொன்ன மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, இப்படிப்பட்ட தரமற்ற கான்கிரீட் கம்பங்கள் வந்துள்ளதையும், அதனால் விபத்து ஏற்பட்டுள்ளதையும், ஏற்கெனவே புதிதாக நடப்பட்டு வரும் மின் கம்பங்கள் எத்தனை உறுதித் தன்மையோடு இருக்கிறது என்பன போன்ற கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?

இதுதொடர்பாக, துறை ரீதியான விசாரணை நடத்தி உடனடியாக இப்புகார் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படவேண்டும். தொடர்ந்து அலட்சியமாகவும், மனசாட்சியற்ற முறையிலும் நடந்துகொள்ளும் தமிழக அரசுக்கு எனது கடும் கண்டனம்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x