Published : 18 Dec 2018 11:21 AM
Last Updated : 18 Dec 2018 11:21 AM

ஆறுமுகசாமி ஆணையம் முன்பு பொன்னையன் ஆஜர்; அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம் முன்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் இன்று ஆஜரானார். மேலும், இன்று ஆஜராக வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அரசு சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு தரப்பினரை விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இதில் ஏற்கெனவே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.

மேலும், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அப்போலோ மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த 14 ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார். அப்போது, ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஆலோசனை நடத்தப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் 'இல்லை' என பதிலளித்திருந்தார். ஆனால், அதற்கு முரணாக, "ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பதற்கான ஆலோசனை நடத்தப்பட்டது" என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

ராதாகிருஷ்ணனை சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்த நிலையில், அப்போலோ மருத்துவமனை தரப்பில் விசாரணை நடத்த மீண்டும் இன்று (செவ்வாய்க்கிழமை) ராதாகிருஷ்ணன் ஆஜராக உள்ளார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், ஏற்கெனவே விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியதன்படி, இன்று காலை 10.30 மணியளவில் ஆஜரானார். பொன்னையனை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என சசிகலா தரப்பு கேட்டிருந்தது. அதன்படி, அவரை விசாரணை ஆணையமும் சசிகலா தரப்பும் விசாரிக்க உள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் இருப்பதாக பொன்னையன் தெரிவித்திருந்தார். அதனால், அவரிடம் என்ன மாதிரியான சந்தேகம், அதற்கான சான்றுகள், ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா என ஆணையம் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் இன்று ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. காலை 10.30 மணியளவில் அவர் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், வேறொரு நாளில் ஆஜராவதாக அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, அவருக்கு இன்று ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாகவும், வேறொரு நாளில் அவர் ஆஜராவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x