

பிரதமர் மோடியின் மெகா ஊழல் குறித்து தமிழகம் முழுவதும் பிரசாரக்கூட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில் ‘‘மோடியின் மெகா ஊழலான ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் சுமார் 1,41,205 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்திருப்பதை தாங்கள் அறிவீர்கள். காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் மூலம் ஒரு விமானத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை ரூபாய் 526 கோடி. ஆனால் திருவாளர் பரிசுத்தம் மோடி வாங்கிய விமானம் ஒன்றின் விலை ரூபாய் 1670 கோடி.
மோடி அரசாங்கமும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் ரபேல் போர் விமானங்கள் வாங்கிய விலை விவகாரத்தில் நாடாளுமன்றத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் தவறான தகவல்களை அளித்துள்ளனர். அரசு கருவூலத்திற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள இந்த மோசமான மெகா ஊழலின் உண்மை விவரங்களை வெளிக்கொண்டுவர பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்படவேண்டும் என தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இத்தகைய மெகா ஊழலினை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுகின்ற மிகப்பெரிய ஜனநாயக பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.
தமிழகத்தின் இன்றைய ஆட்சியாளர்கள் பாசிச பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு தங்களின் தவறான அணுகுமுறை, மக்கள் விரோதபோக்கு, ஊழல்கள் ஆகியவற்றை மூடிமறைக்க முயலுகின்றனர். இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசும் துணை நிற்கின்றது. கடந்த காலங்களில் நீட் தேர்வில் மாநில அரசின் தவறான அணுகுமுறை, ஸ்டெர்லைட் விவகாரம், இயற்கை பேரிடரில் மக்களை காப்பாற்றுவதில் இயலாமை, மாநில அரசின் அனைத்து துறைகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஊழல்கள், அரசாங்க ஊழியர்கள், விவசாயிகள், இளைஞர்கள் போன்றோரின் தொடர் போராட்டங்களில் மாநில அரசின் மெத்தனப் போக்கு போன்ற எண்ணிலடங்கா மாநில அதிமுக அரசின் மக்கள் விரோத செயல்களை மக்கள் மன்றத்தில் எடுத்துரைக்கின்ற பொறுப்பும் கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.
மத்திய பா.ஜ.க. அரசு, மாநில அதிமுக அரசுகளின்; மக்கள் விரோத போக்கினை மக்களுக்கு எடுத்துரைக்கின்ற விதமாக தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரச்சார பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று 10.12.2018 அன்று நடைபெற்ற மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மாவட்டத் தலைவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட எல்லா சட்டமன்ற தொகுதிகளிலும் வருகின்ற 02.01.2019 ஆம் தேதியிலிருந்து 12.01.2019 தேதி முடிய தொடர் பொதுக்கூட்டங்களை நடத்திட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற தேர்தலை வெகு விரைவில் சந்திக்கவிருக்கின்றோம். அதன் முதற்கட்டமாக இத்தகைய பிரச்சாரக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் தமிழக காங்கிரஸ் கட்சி அறிவித்த அனைத்து நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், பேரணி மற்றும் பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றினை வெற்றிகரமாக நடத்தி முடித்ததுபோல், மாவட்டத் தலைவர்கள் இந்த கண்டன கூட்டங்களையும் வெற்றிகரமாய் நடத்தி முடித்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் கூறியுள்ளார்.