

வாணியம்பாடி அருகே சிறுத்தை தாக்கியதில் பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் விவசாயி பலராமன் (50) என்ப வருக்கு சொந்தமான கன்றுக்குட் டியை நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று கடித்து குதறியது. இதனால், கிராம மக்கள் பெரும் அச்சத் தில் இருந்தனர்.
இந்நிலையில், வாணியம்பாடி அடுத்த நாகலேரி வட்டம் சிக்கனாங்குப்பம் பகுதி யைச் சேர்ந்த சகோதரிகளான பாரதி, அலமேலு ஆகியோர் நேற்று காலை அதேபகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றனர்.
அப்போது, ஏரிக்கரை அருகேயுள்ள கரும்பு தோட்டத்தில் இருந்து ஏதோ சத்தம் வந்ததைக் கேட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது, திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று அலமேலுவை தாக்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, சிறுத்தையை விரட்ட முயன்ற பாரதியையும் சிறுத்தை தாக்கியுள்ளது. 2 பெண்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரையும் சிறுத்தை தாக்கியது.
ஆயுதங்களுடன் திரண்ட மக்கள்
இந்த தகவல் காட்டுத்தீ போல பரவியதால், சிறுத்தையை விரட்ட பொதுமக்கள் ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். ஆனால், சிறுத்தை கரும்பு தோட்டத்துக்குள் பதுங்கியது.
அப்போது, சிலர் கரும்பு தோட்டத்துக்கு தீ வைத்த னர். அதே கிராமத்தைச் சேர்ந்த கமல், சுப்பு ஆகியோர் சிறுத் தையை நோக்கி கற்களை வீசினர். அப்போது, சிறுத்தை அவர்கள் மீது பாய்ந்து 2 பேரையும் தாக்கியது. இதைக் கண்ட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
சிறுத்தையை பிடிக்க கூண்டு
படுகாயமடைந்த பெண்கள் உட்பட 5 பேரையும் பொதுமக்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாணியம்பாடி நகர போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். தகவலறிந்து விரைந்து வந்த ஆலங்காயம், திருப்பத்தூர் வனத் துறையினர், கரும்பு தோட்டத்தில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.