Published : 11 Sep 2014 01:17 PM
Last Updated : 11 Sep 2014 01:17 PM

டாஸ்மாக் மீதான அக்கறையை தொழில் துறையில் ஜெ. அரசு காட்ட வேண்டும்: விஜயகாந்த் காட்டம்

டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த காட்டும் அக்கறையை, தொழில்துறை வளர்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு காட்டி இருந்தால், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாற்றம் தந்த தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. மத்திய அரசின் புள்ளியியல் துறை 2012-13 ஆம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்களெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகின்றன. ஆனால் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய தமிழ்நாட்டை கடைசி இடத்திற்கு கொண்டு சென்றதுதான் ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசின் சாதனையா?

இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5% சதவீதம் ஆகும். ஆனால் இந்திய சராசரியைவிட தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் 3.39% சதவீதம் என்று குறைந்திருப்பது ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிக்காட்டுகிறது.

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு கடுமையான மின்வெட்டு, லஞ்சம், ஊழல், எளிதில் அணுக முடியாத நிர்வாகம், தொழில் தொடங்குவோருக்கு பல்வேறு நிர்பந்தங்கள் மற்றும் சரியான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் தான் தொழில்துறை நலிவுற்று பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

டெல்லியில் நேற்று அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அங்கே சென்று தமிழநாட்டில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டிய தமிழக அரசின் மின்துறை அமைச்சரோ, தூத்துக்குடியில் அமர்ந்துகொண்டு, மேயர் தேர்தல் பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுதான் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் லட்சணம் ஆகும்.

முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்த அறிவிப்புகளெல்லாம் வெற்று அறிவிப்புகள் என நிரூபணமாகிறது. ஏழை எளிய மக்களின் வறுமையை பயன்படுத்திக்கொண்டு, கவர்ச்சித் திட்டங்களை அறிவித்து, அதை முழுமையாக செயல்படுத்தாமலும், மக்களுக்காக வளர்ச்சி திட்டங்களைப் பற்றி சிந்திக்காமலும் செயல்பட்டதன் விளைவுதான், தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி நிலையை நோக்கிச் சென்றுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் புதிய தொழில் துவங்க நம் மாநிலத்தில் உள்ளவர்களே முன்வருவார்களா என்பது சந்தேகமே. மேலும் வெளிமாநிலத்திலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ, இந்த நிலையை பார்த்த பிறகு தொழிலதிபர்கள், தமிழ்நாட்டில் தொழில் துவங்க எப்படி முன்வருவார்கள்?

டாஸ்மாக் வருமானத்தை உயர்த்த காட்டும் அக்கறையை, தொழில்துறை வளர்ச்சியில் இந்த அரசு காட்டி இருந்தால் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தொழில்துறையை முன்னேற்றி இருக்கலாம். அதன் மூலம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இருக்கும்.

சட்டசபையில் இதுபோன்ற பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வர எதிர்கட்சி எம்.எல்.ஏ-க்கள் முயலும் போதெல்லாம் அவர்களை ஏளனம் பேசியும், வாய்ச்சவாலின் மூலம் பிரச்சனைகளை திசை திருப்பியும், முதல்வரை துதி பாடுவதிலும், வீணடிக்கும் நேரத்தை மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தி இருந்தால், நம் தமிழகம் உண்மையான வளர்ச்சியை கண்டிருக்கும்.

எதற்கெடுத்தாலும் என் தலைமை, என் ஆட்சி, என் அரசு, என்று நான், நான், நான் என்று சொல்லும் முதல்வர் இந்த பொருளாதார வளர்ச்சி, வீழ்ச்சி அடைந்ததற்கு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என மக்கள் கூறுகிறார்கள்.

"முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது" என்பது போல தமிழகத்தின் உண்மை நிலையை மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதை, இனியும் தமிழக மக்களிடம் மறைக்க முடியாது. எனவே, இனியாவது தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுத்து, பொருளாதார வளர்ச்சியில் கடைகோடியில் இருக்கும் தமிழகத்தை வளர்ச்சிபெறும் மாநிலமாக மாற்ற முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x