Last Updated : 15 Dec, 2018 02:10 PM

 

Published : 15 Dec 2018 02:10 PM
Last Updated : 15 Dec 2018 02:10 PM

சென்னை ஐஐடியில் சர்ச்சை: சைவம், அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில்

சென்னையில் மத்திய அரசின் ஐஐடி கல்வி நிறுவனத்தில் சைவம், அசைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உணவகத்தில் தனித்தனி நுழைவு வாயில் அமைத்து நோட்டீஸ் ஒட்டப்பட்டது தொடர்பாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

சைவம் சாப்பிடும் மாணவர்கள் தனிவாயில் வழியாகச் செல்லவும், அவர்களுக்குத் தனியாக கைகழுவும் இடம் அமைக்கப்பட்டும் இருக்கிறது, அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்குத் தனியாக அமைக்கப்பட்டு இருக்கிறது என்பது குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த நோட்டீஸ் மாணவர்கள் சமூக ஊடகங்களில் பரப்பியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஒரு மாணவர் பிடிஐ நிருபரிடம் கூறுகையில், “ இமாலயா மெஸ் வளாகத்தில் உள்ள 2-வது தளத்தில் மாணவர்களுக்கான உணவகம் இருக்கிறது. இங்கு சைவம் சாப்பிடும் மாணவர்களுக்குத் தனி நுழைவு வாயிலும், அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்குத் தனி நுழைவு வாயிலும் அமைத்தும், கைகழுவும் இடம் தனியாக அமைத்தும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்து. இது மாணவர்களைப் பிளவுபடுத்தும் செயலாகும்” என்று தெரிவித்தார்.

இது குறித்து உணவகத்தைக் கண்காணிக்கும் அதிகாரியிடம் பிடிஐ சார்பில் கேள்விஎழுப்பப்பட்டது, அதற்கு அவர், “ இந்த நோட்டீஸ் குறித்து எந்தவிவரமும் தெரியாது. அதேசமயம், ஜெயின் மாணவர்கள் சாப்பிடுவதற்காக (வெங்காயம், பூண்டுஇல்லாமல்) தனியாக வசதிகள் செய்யப்பட்டன. ஆனால், இதுபோன்று சைவம், அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கான நுழைவு வாயில் அமைக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது தெரியாது” எனத் தெரிவித்தார்.

இது குறித்து ஆய்வு மாணவர் ஒருவர் கூறுகையில் “ சைவம் மட்டுமே உணவகத்தில் சமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த ஆண்டு எழுந்தது. இப்போது, முழுமையாகத் தீண்டாமையை புகுத்துகிறார்கள். முதல்முறையாகச் சைவம், அசைவம் சாப்பிடும் மாணவர்களுக்கு தனித்தனி நுழைவு வாயில் அமைக்கப்படுகிறது.

இதற்கு முன் இதுபோல் பாகுபாடு காட்டியதில்லை. அதுமட்டுமல்ல, சைவம் சாப்பிடுபவர்களுக்கு சமைக்கத் தனியாக பாத்திரங்கள், தட்டுகளும், அவர்கள் கைகழுவுவதற்கு தனியாக வாஷ்பேசின்களும் அமைக்கப்பட்டுப் பிரிக்கப்பட்டுள்ளது வேதனையாகும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த ஆண்டு மே மாதம் ஐஐடியில் சில மாணவர்கள் மாட்டிறைச்சி திருவிழா நடத்தினார்கள். இதனால், சைவம் சாப்பிடுபவர்களுக்காக தனியாக உணவகம் உருவாக்க வேண்டும் என மாணவர்களில் ஒருதரப்பினர் கோரிக்கை விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x