

அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு வரும் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று கடந்த 2010-ம் ஆண் டில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் தது. இதை எதிர்த்து 14-க்கும் மேற்பட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.
இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நசீர் அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் கடந்த அக்டோபரில் பதவி யேற்றார்.
அவர் பதவியேற்றபிறகு அயோத்தி வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அகில பாரத இந்து மகா சபா தாக்கல் செய்த இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார். இதே மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கவுல் அமர்வு முன்பு வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
அப்போது அயோத்தி வழக்கை விசா ரிக்க 3 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியபோது, "அயோத்தி வழக்கை உச்ச நீதிமன்றம் நாள்தோறும் விசாரித்து விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறிய போது, "அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பாஜக உறுதியுடன் உள்ளது. இதிலி ருந்து பின்வாங்க மாட்டோம். எனினும் இப்போதைக்கு அவசர சட்டம் பிறப்பிக் கும் திட்டமில்லை" என்று தெரிவித்தார்.