

நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் தனுஷின் தந்தையான தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா படத்தயாரிப்புப் பணிகளுக்காக சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம், 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
கடனைப் பெற்ற போது, தான் தராவிட்டாலும் தன் சம்பந்தியான நடிகர் ரஜினிகாந்த் தருவார் என கஸ்தூரிராஜா தெரிவித்ததாக போத்ரா கூறி வந்தார். இத்தொகையை திருப்பிக் கொடுக்கும் வகையில் கஸ்தூரிராஜா, போத்ராவுக்கு அளித்த காசோலைகள் வங்கியில் பணமின்றித் திரும்பி வந்தன.
இதையடுத்து கஸ்தூரிராஜாவுக்கு எதிராக போத்ரா, செக் மோசடி வழக்கைத் தாக்கல் செய்தார். அதில் கஸ்தூரிராஜா பணத்தைச் செலுத்த உத்தரவிட வேண்டும் அல்லது நடிகர் ரஜினியுடன் சேர்ந்து கூட்டுச்சதியில் ஈடுபட்டுள்ளார் என அறிவிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் போத்ரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நடிகர் ரஜினி தாக்கல் செய்த மனுவில், பணம் பறிப்பதற்காக போத்ரா இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் போத்ரா வழக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, பணம் பறிக்கும் நோக்குடன் செயல்படுவதாக நடிகர் ரஜினி கருத்து தொடர்பாக சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஜூன் 6-ம் தேதி நேரில் ஆஜராக நடிகர் ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தனக்கு எதிரான போத்ராவின் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் ரஜினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற வழக்கில் தெரிவித்த கருத்துக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர முடியாது என சுட்டிக்காட்டி அவதூறு வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரியிருந்தார். இந்த மனுவை மே மாதம் விசாரித்த நீதிமன்றம், விசாரணைக்குத் தடை விதித்திருந்தது.
இந்த வழக்கில் இன்று இறுதி உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.