

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்கு உட்பட்ட காந்தல் பகுதி யில் நகராட்சி உருது தொடக்கப் பள்ளி உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை செயல்படுகிறது. மாணவர்களுக்கு சிறந்த கல்வி அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் பள்ளிகளை பெற்றோர் நாடுவதால், அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. நகராட்சிப் பள்ளிகள் குறித்து சொல்லவே வேண்டாம், பல நகராட்சிப் பள்ளிகளுக்கு பூட்டுப் போடப்பட்டுவிட்டது.
இந்நிலையில், சொர்ப்ப அளவி லான மாணவர்களே காந்தல் பகுதி நகராட்சி உருது தொடக்கப் பள்ளியில் படித்து வந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தின் முயற்சியால், தற்போது மாணவர்களின் எண் ணிக்கை 61-ஆக உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை வகுப்புகள் எடுத்து வருகின்றனர்.
உதகையில் ஓரிரு தனியார் பள்ளிகளை தவிர பிற பள்ளிகளில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ இல்லாத நிலையில், இப்பள்ளியில் நகராட்சி மூலமாக ரூ.3.75 லட்சம் மதிப்பில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் பாடங் கள் நடத்தப்படுவதால், மாணவர் கள் எளிதாக கற்றுக்கொள்வதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் முகமது அமீன் கூறும் போது, ‘தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை சார்பில் 1,6,9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, அதன் மூலமாக கற்பிக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வி ஆண்டில் பிற வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இப்பள்ளியை பொறுத்தவரை, புதிய பாடத் திட்டத் தின் கீழ் 1-ம் வகுப்பு மாணவர் களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
க்யூ.ஆர். கோடு தொழில்நுட்பத்தில் பாடப் புத்தகத்தை செல்போனில் ஸ்கேன் செய்து, அதன்மூலமாக பாடம் நடத்தப்பட்டு வந்தது. தற்போது, உதகை நகராட்சி மூலமாக ரூ.3.75 லட்சம் செலவில் ஸ்மார்ட் கிளாஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அதன்மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது.
பெரிய திரையில் பாடம் நடத்தப்படுவதால், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு வருகிறது. கவன சிதறலின்றி பாடங்களை முழுமையாக கவனிக்கின்றனர்.உருது, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப் பாடங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுதவிர மற்ற வகுப்புகளுக் கான பாடப் புத்தகங்களும் ஆன்லைனில் கிடைப்பதால், அவற்றை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்தப்படுகிறது' என்றார்.
சிறுபான்மையின மாணவர் களின் நலன் கருதி, இப்பள்ளியை 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டுமென, பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.