Published : 24 Sep 2014 10:08 AM
Last Updated : 24 Sep 2014 10:08 AM

மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்: திருவள்ளூர், மயிலையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்

மஹாளய அமாவாசையை முன் னிட்டு, திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் நேற்று ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்து, முன்னோர் களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

நேற்று மஹாளய அமாவாசை தினமாகும். இந்த நாளில் பொது மக்கள் தங்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து, புண்ணிய தலங்கள், ஆறு மற்றும் குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாகும். அந்த வகையில், திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் நேற்று, அதிகாலை முதல், மதியம் வரை பொதுமக்கள் தர்ப்பணம் அளித்தனர்.

திருவள்ளூர், ஊத்துக் கோட்டை, திருத்தணி, பொன்னேரி என திருவள்ளூர் மாவட்டம் மட்டு மல்லாமல், சென்னை, காஞ்சி புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங் களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தெப்பக்குளத்தின் நான்கு பக்க படிக்கட்டுகளில் குவிந்து, அரிசி, தேங்காய், பூக்கள், வாழைப்பழம், வாழைக்காய், அகத்திக் கீரை உள்ளிட்டவை வைத்து, முன்னோர்களுக்கு தர்ப் பணம் செய்தனர். தொடர்ந்து, வீர ராகவ பெருமாள் கோயிலில், நீண்ட வரிசையில் நின்று, பெரு மாளை வழிப்பட்டனர்.

திருவள்ளூர் வீரராகவ பெரு மாள் கோயில் தெப்பக் குளம் மட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கோயில் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் பொதுமக்கள், தங்கள் முன்னோர்களுக்கு நேற்று தர்ப்பணம் செய்தனர். அதே நேரத்தில், நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்யாமல், ஆவடியில் உள்ள சார் பதிவாளர் அலுவலக சாலையின் இரு ஓரங்களிலும் நின்று பொதுமக்கள் தர்ப்பணம் செய்தது வியப்பாக இருந்தது.

இது குறித்து பொதுமக்கள் தெரிவித்ததாவது: ‘சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் குளம், ஏரி ஆகிய நீர் நிலைகள் குடியிருப்புகளாக மாறி வருகின்றன. இதனால், புறநகர் பகுதிகளில் நீர் நிலை என்பது அரிதான ஒன்றாக மாறி வருகிறது. இந்நிலையில், ஆவடியில், சார் பதிவாளர் அலுவலக சாலை அருகே உள்ள குளத்தைச் சுற்றி குடியிருப்புகள் பெருகி விட்டன. அக்குளத்தில் தர்ப்பணம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஆகவே பல ஆண்டுகளாக, ஆவடியில், சார் பதிவாளர் அலுவலக சாலையின் இரு ஓரங்களில் தான் தர்ப்பணம் செய்து வருகிறோம்’ என்று தெரிவித்தனர்

மயிலை

சென்னை மஹாளய அமா வாசையை முன்னிட்டு மயிலை கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்கள், சென்னை மெரினா கடற்கரை உட்பட பல இடங்களிலும் ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

மாதந்தோறும் அமாவாசை நாளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்கள் வழக்கம். தை, ஆடி அமாவாசையில் நீர்நிலை களில் புனித நீராடி திதி கொடுப் பார்கள். புரட்டாசியில் மஹாளய பட்சத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படு கிறது. இந்த காலகட்டத்தில் பித்ருக்களும் பித்ரு தேவதைகளும் பூமிக்கு வருவதாகவும் அப்போது தர்ப்பணம் செய்தால் பித்ரு தோஷங்கள் விலகும். முன்னோரின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். மாத அமாவாசை மற்றும் முன்னோரின் திதி நாட்களில் தர்ப்பணம் செய்யாதவர்கள்கூட மஹாளய அமாவாசையில் திதி கொடுப்பது முக்கியம் என்று கூறப்படுகிறது.

மஹாளய அமாவாசை நேற்று காலை 10.47 முதல் இன்று மதியம் 12.25 வரை நீடிக்கிறது. இதனால், கோயில்களிலும் நீர்நிலைகளிலும் ஏராளமானோர் நேற்று தர்ப்பணம் செய்தனர். சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களிலும் புனித நீர்நிலைகளிலும் மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளிலும் ஏராளமானோர் திதி கொடுத்து, மறைந்த தாய் தந்தையர் மற்றும் முன்னோரை நினைவுகூர்ந்து வழிபட்டனர். கோயில் குளங்களில் தேங்காய், பூ, பழம், வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை வைத்து வழிபட்டு, எள்ளும் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், கோயில்களில் தீபம் ஏற்றி வழிபட்டனர். வீடுகளிலும் முன்னோரின் படங்களுக்கு மாலை போட்டு வணங்கி, படையலிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x