

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஏற்றியது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுதும் உள்ள ரத்த வங்கிகளை சோதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் பரிசோதனைக்காகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக கண்டறித்துள்ளனர்.
அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை பெற்று அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. சில நாட்கள் கழித்து அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடல் நிலையில் திடீரென பாதிப்பு ஏற்பட்டதால் அந்த கர்ப்பிணிப் பெண் மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது அவரை பரிசோதித்த மட்ருத்துவர்கள் திடுக்கிட்டுப் போயினர், அந்தப் பெண்ணுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு கடந்த மாதம் ரத்தம் ஏற்றபட்டதால் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டதாக தெரியவந்தது.
இது தொடர்பாக மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் நடத்திய விசாரணையில் சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அங்குள்ள அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும், அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதை சேமித்து வைத்து அதை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றியதும் தெரியவந்தது. மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக மிகப்பெரும் தவறு நடந்துதும் தெரியவந்தது. சுகாதாரத்துறை உடனடியாக ரத்த வங்கி ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் அங்குள்ள ரத்த வங்கியில் உள்ள ரத்தத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அவற்றைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரிந்தும் தனக்கு உரிய சிகிச்சையோ, அடுத்தகட்ட நடவடிக்கையோ எதுவும் எடுக்காமல் சாதாரண குளுக்கோஸ் மட்டுமே ஏற்றி வீட்டுக்கு அனுப்பி விட்டதாகவும், இதுகுறித்து அறிந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் தற்போது செயலில் இறங்கியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
ஜனவரி 30-ம் தேதி அந்தப் பெண்ணுக்கு பிரசவ நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அதுவரை அவருக்கு கூட்டு மருத்துவ சிகிச்சை அளித்து எச்.ஐ.வி பாதிப்பு இல்லாத குழந்தையை அவர் பெற்றெடுக்கத் தேவையான உதவிகள் செய்யப்படும் என சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் 14 ரத்த வங்கிகளின் இருப்பு விவரங்களையும் சேகரித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து ரத்தத்தையும் மறு பரிசோதனை செய்யவும் சுகாதரத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனையின் ஊழியர்களின் அலட்சியத்தால் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட ரத்தம் சேகரிக்கப்பட்டதும், மீண்டும் அதே ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அலட்சியமாக ஊழியர்கள் கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்றியதும் உச்சகட்ட அலட்சியமாக பார்க்கப்படுகிறது. இதுபோன்று எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிற விவரம் இனிமேல்தான் தெரியவரும்.