ஜனவரி 1-ம் தேதிக்குள் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்திட வேண்டும்: மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவு

ஜனவரி 1-ம் தேதிக்குள் மெரினா கடற்கரையை சுத்தப்படுத்திட வேண்டும்: மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவு
Updated on
2 min read

மெரினா கடற்கரை குப்பையாக காட்சி அளிக்கிறது. முதலில் மெரினாவை சுத்தப்படுத்திவிட்டு வாருங்கள். நேரில் ஆஜராவதிலிருந்து 3-ம் தேதி முடிவெடுக்கிறோம் என நீதிபதிகள் அமர்வு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் சென்னை வடபழனி பெருமாள் கோயில் தெற்கு தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இந்தக் கட்டிடம் விதிகளை மீறிக் கட்டப்பட்டதாகக் கூறப்படுவதால் இது தொடர்பாக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனு  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அமர்வு முன் விசாரணையில் உள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''சட்டவிரோத கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? விபத்தில் பலியான நான்கு பேரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா?'' என கேள்வி எழுப்பினர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.

ஆனால் ஆணையர் ஆஜராகாததால் மறுநாள் வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள் சென்னை மாநகராட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆணையர் இனி ஒவ்வொரு முறையும் ஆஜராக உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் வினித் கோத்தாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நேரில் ஆஜரான மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்  விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். உயிரிழந்தவர், காயம்பட்டவர்களுக்கு என்ன இழப்பீடு வழங்கப்பட்டது என்று கேட்டனர்.

அப்போது பதிலளித்த அரசின் கூடுதல் வழக்கறிஞர் வடபழனி தீ விபத்தில் பலியான 4 பேருக்கு தலா 1 லட்ச ரூபாயும், பலத்த காயம் அடைந்த 6 பேருக்கு தலா  ரூ.50,000, லேசான காயம் அடைந்த 2 பேருக்கு தலா 25,000 ரூபாய் வீதம் 9 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இழப்பீடு மிகக்குறைந்த அளவு என்று தெரிவித்த நீதிபதிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த விபத்து இது. இதில் இழப்பீட்டு தொகையை எப்படி முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கினீர்கள், அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கட்டிட உரிமையாளருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, இழப்பீடு எவ்வாறு வழங்கப்பட்டது, எப்போது, எந்த வங்கியின் மூலமாக வழங்கப்பட்டது, காசோலை எண் என்ன என்பதை விரிவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

அப்போது பதிலளித்த அரசு கூடுதல் வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், மேஜிஸ்ட்ரேட் அனுமதி கொடுத்ததும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் விசாரணை நிறைவு பெறும் தருவாயில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது போதுமானது அல்ல, கூடுதல் இழப்பீடு வழங்குவது சாத்தியமா? என சென்னை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என அமர்வு உத்தரவிட்டது. மேலும் கட்டிட உரிமையாளர் விஜயகுமார் மீதான குற்ற வழக்கில் குற்றப்பத்திரிக்கையை 1 வாரத்தில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கட்டிட உரிமையாளருக்கு எதிரான குற்ற வழக்கும், மாநகராட்சி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையும் நிலுவையில் உள்ளது  என தெரிவித்த நீதிபதிகள் அமர்வு, அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை 3 வாரத்தில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

பின்னர் வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் அரசின் செயல்பாடு சரியானதாக போதுமானதாக இல்லை. ஏற்கெனவே தெரிவித்ததுதன். உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையான மெரினா கடற்கரை தற்போது தூய்மையாக இல்லை. அதை தூய்மையாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கையை அரசு அதிகாரிகள் உரிய முறையில் எடுப்பதில்லை என வேதனை தெரிவித்தனர்.

மெரினாவில் பொது இடங்களில் மலம், சிறுநீர் கழிப்பது போன்ற காரணங்களாலும், முறையற்ற கடைகளாலும் மெரினா அங்கு குப்பைகள் அதிகமாகி வருகிறது. ஒரு முறையாவது ஆணையர் கார்த்திகேயனும், அரசு அதிகாரிகளும் மெரினா கடற்கரைக்குச் சென்று ஆய்வு நடத்துங்கள் என்று தெரிவித்த நீதிபதிகள் புத்தாண்டிற்குள் மெரினா கடற்கரையை தூய்மையாக மாற்ற திட்டம் வகுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்  நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிப்பது குறித்து ஜனவரி 3-ம் தேதி  முடிவெடுக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள் புத்தாண்டின் போது தூய்மையான மெரினாவாக இருக்கும் என ஆணையர் மீது நம்பிக்கை வைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

மெரினா சுத்தப்படுத்துங்கள். பின்னர் படிப்படியாக மாவட்டம், மாநிலம் முழுவதும் தூய்மைப்படுத்தலாம் என தெரிவித்து முழுமையான அறிக்கையை 2019 ஜனவரி 3-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு அன்று மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in