

அணை பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (வெள்ளிக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், "அணை பாதுகாப்பு மசோதா 2018 விவகாரத்தில் தாங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும். அனைத்து மாநிலங்களின் ஒப்புதலைப் பெறாமல் அணை பாதுகாப்பு வரைவு மசோதாவை தாக்கல் செய்ய வேண்டாம் என கடந்த 15.6.2018 அன்று கடிதம் எழுதியிருந்தேன். இதனை வலியுறுத்தி 26.6.2018 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசின் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.
ஆனால், தமிழகத்தின் முக்கிய கவலைகளை கருத்தில்கொள்ளாத மத்திய அரசு, லோக் சபாவில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
1. அணை பாதுகாப்பு மசோதாவின் பிரிவு 23 (1) இல், குறிப்பிட்ட அணை அமைந்துள்ள மாநிலத்திற்கு அல்லாமல், வேறொரு மாநிலத்திற்கு சொந்தமாக இருந்தால், அந்த அணையை தேசிய அணை பாதுகாப்பு அதிகாரிகளே நிர்வகிப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
அண்டை மாநிலங்களில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துணைக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் இரு மாநில ஒப்பந்தங்களின்படி தமிழக அரசே நிர்வகித்து வருகிறது. மேலும், முல்லைப் பெரியாறு மீதான தமிழக அரசின் உரிமையை 7.5.2014 அன்று உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், அணை பாதுகாப்பு மசோதா மூலம் மேற்கண்ட அணைகள் மீதான தமிழக அரசின் உரிமையைப் பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே, அதற்கேற்றவாறு அணை பாதுகாப்பு மசோதா விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அணைகள் வனப்பகுதிக்குள்ளோ அல்லது வனவிலங்கு சரணாலயத்திலோ அமைந்திருந்தால் அதனை மாநில அதிகாரிகளே நிர்வகிக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதற்கேற்ற அம்சங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட வேண்டும்.
அதனால், அணை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் கருத்துகளை அறியாமல், இந்த மசோதாவை சட்டமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.