Published : 26 Dec 2018 11:00 AM
Last Updated : 26 Dec 2018 11:00 AM

ரூ.3 கோடி மோசடி வழக்கில் வங்கி மேலாளர், 6 டாக்டர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை: மதுரை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவ உபகரணங்கள் வாங்கு வதற்காக வங்கியில் கடன் பெற்று உபகரணங்கள் வாங்காமல் ஏமாற்றிய வழக்கில் வங்கி மேலாளர் மற்றும் 6 டாக்டர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையில் தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகர ணங்கள் வாங்குவதற்காக மேல மாசி வீதியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கோடிக் கணக்கில் கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிபிஐயில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், அந்த வங்கியில் மதுரையைச் சேர்ந்த 9 தனியார் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதற்காக நெல்லையைச் சேர்ந்த தனியார் ஏஜென்ஸி பெயருக்கு ரூ.3 கோடிக்கு காசோலை வழங்கியதும், ஆனால் மருத்துவ உபகர ணங்கள் வாங்காமல் உபகரணங்கள் வாங்கியதாகப் போலி ரசீது தயாரித்து வழங்கியதும் கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் கணக்கில் ரூ.3 கோடி வரவு வைக்கப்பட்டு, அதற்கு வங்கி மேலாளர் கமிஷன் வாங்கியதும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக 2008-ல் வங்கி மேலாளராகப் பணிபுரிந்த குமார், டாக்டர்கள் சுப்பிரமணியன், ஜலால் ஜவகர், முத்துச்சாமி, ராஜவேல், ராஜாமணி, காயத்ரி ரங்கன், சண்முகவேல், பானுமதி, சுந்தர்ராஜன் ஆகியோரை சிபிஐ போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை நிலுவையில் இருந்தபோது டாக்டர்கள் முத்துச்சாமி, ராஜாமணி, காயத்ரி ரங்கன் ஆகியோர் இறந்துவிட்டனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் வங்கி மேலாளர் குமார் மற்றும் 6 டாக்டர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் விஜயன் செல்வராஜ் வாதிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x