

சென்னையில் பணியாற்றும் பெண் உதவி ஆய்வாளர் தாம்பரம் படப்பை அருகே சாலை விபத்தில் பலியானார்.
சென்னை காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர் மாங்குயில் (32). 2011-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணியில் இணைந்த மாங்குயிலின் சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் கோடாலிகருப்பூர் ஆகும்.
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றிய அவர் சமீபத்தில் கிண்டியிலுள்ள பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
மேற்கு தாம்பரம் கன்னடப் பாளையத்தில் வசித்து வந்த பூங்குயிலுக்குத் திருமணமாகி விட்டது. கணவர் சஃபானா கார்டன் பகுதியில் ஒரு குடியிருப்பில் பணியாற்றி வருகிறார்.
பூந்தமல்லி நீதிமன்றத்தில் கோர்ட் பணிகளை பூங்குயில் பார்த்து வந்துள்ளார். இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும்போது கணவரிடம் பூந்தமல்லி கோர்ட்டில் பணி உள்ளதாகக் கூறி கிளம்பியுள்ளார். இன்று மதியம் கிண்டியிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் படப்பை தாண்டி மணிமங்களம் அருகே செரப்பனஞ்சேரி பேருந்து நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவர் வந்த இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி ஒன்று மோதியது. மோதிய வேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உதவி ஆய்வாளர் மாங்குயில் லாரியின் முன்பக்க டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிப்பர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.