Published : 11 Dec 2018 07:48 AM
Last Updated : 11 Dec 2018 07:48 AM

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2016-ம் ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்க பரிசீலிக்க வேண்டும்: ஒரு நபர் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 2016 ஜனவரி முதல் ஊதிய உயர்வு வழங்கும் கோரிக்கையை ஒரு நபர் ஆணையம் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, ஊதிய உயர்வு முரண்பாடுகளைக் களைவது உள்ளிட்ட கோரிக்கை களை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பு வேலை நிறுத்தம் அறிவித்தது. இப்போராட் டத்துக்கு தடை கோரி, மதுரையைச் சேர்ந்த லோகநாதன் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் கேட்டுக்கொண்டதால் வேலை நிறுத்தப் போராட்டத்தை டிச.10 வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒத்திவைத்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் வாதிடுகையில், ‘ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை பல்வேறு துறைகளிடம் ஆலோசித்த பிறகே அமல்படுத்த முடியும்’ என்றார்.

ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர் ஷாஜிசெல்லன் வாதிடுகையில், ‘‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவீனம் ஏற்படாது.

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் 1.1.2016 முதல் அமல்படுத்தப் பட்டன. ஆனால் தமிழகத்தில் 2017 அக்டோபர் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்பட்டது. இதனால் 1.1.2016 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை கேட்டு ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள சித்திக் குழுவிடம் மனு அளித்தோம்.

அந்தக்குழு தங்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை வழங்குவது தொடர்பாக முடிவெடுக்க அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 1.1.2016 முதல் ஊதிய உயர்வு வழங்கி, 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பாக சித்திக் குழு ஆய்வு செய்து, இந்த மாத இறுதிக்குள் அரசிடம் அறிக்கை அளிக்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான ஸ்ரீதர் குழுவின் அறிக்கையை மூடி முத்திரையிட்ட கவரில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதுவரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x