சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் மாணவி தற்கொலை முயற்சி

சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் மாணவி தற்கொலை முயற்சி
Updated on
1 min read

சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கையை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், நெல்லூர் பாலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதா (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் ராதாவுக்கு  உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தேறியது. சில காலம் வீட்டில் ஓய்வு எடுக்கட்டும் என அவரை அவரது பெற்றோர் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக பூந்தமல்லியிலிருந்து ஆந்திரா செல்ல மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்துக்கு நேற்று மாலை அழைத்து வந்தனர்.

மவுனமாக அமர்ந்திருந்த ராதா கழிப்பறைக்குச் செல்லவேண்டும் எனக் கூறி பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அவர் சென்று வெகுநேரமாகியும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரைத் தேடியுள்ளனர். பேருந்து நிலையத்தில் பல இடங்களில் தேடிய அவர்கள் கழிப்பறை அருகே தங்கள் மகள் கையில் ரத்தம் வழியக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மகளது நிலையைப் பார்த்து பெற்றோர் அலறித் துடித்தனர். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து மாணவிக்கு முதலுதவி அளித்து கையில் கட்டுப்போட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவி ராதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து மாதவரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in