Published : 12 Dec 2018 10:27 AM
Last Updated : 12 Dec 2018 10:27 AM

நெல்லை மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் பாரதி விழாவில் சிறப்பு அழைப்பாளர்களை கேள்விகளால் திணறடித்த மாணவர்கள்

திருநெல்வேலி மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மகாகவி பாரதியின் 137-வது பிறந்த நாள் விழாவில், பாரதியார் குறித்த பல்வேறு கேள்விகளை கேட்டு சிறப்பு அழைப்பாளர்களை மாணவ, மாணவிகள் திணறடித்தனர்.

இந்த விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஏஎஸ்பி கிருஷ்ணசாமி பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் வேல்முருகன் , ஆசிரி யர்கள் சிவசங்கரன், சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் மாணவ,மாணவிகளுக்கு பாரதியின் கவிதைகள் குறித்து விளக்கி பேசினார். அப்போது கேள்விக் கணைகளை தொடுத்து மாணவர்கள் திணறடித்தனர்.

இது குறித்து நாறும்பூநாதன் கூறியதாவது:

பொதுவாக இது போன்ற பாரதி விழாக்களில் பாரதி குறித்தும், அவரது கவிதைகள், தேச விடுதலை போராட்டத்தில் அவரது பங்கு பற்றியும் பேச்சாளர்கள் பேசு வது வழக்கம். இதை மாணவ, மாணவிகள் வெறுமனே கேட்ப தோடு நிறுத்திக் கொள்வர். ஆனால், இந்த முறை அவர்களோடு அருகில் அமர்ந்து உரையாடல் நிகழ்த்திய போது, அவர்கள் கேள்விகள் கேட்டு துளைத்து எடுத்து விட்டனர்.

பிரமிக்க வைத்தன

மாணவர்கள் கேட்ட கேள்விகள் உண்மையில் பிரமிக்க வைத்தன. "பாரதியார் படிக்கும்போது அவரோடு பெண்கள் படித்தார்களா ?" பாரதியாருக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் பெயர் என்ன ? என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு, ஆசிரியர் பெயர் சரியாக தெரியவில்லை. சுமார் 128 ஆண்டுகளுக்கு முன்பு படித்த தால், இது குறித்து சரியான தகவல் தெரியவில்லை என்று நான் சொன்னேன். உடனே அந்த மாணவன் " ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாபர், அவுரங்கசீப், ஷாஜகான் உள்ளிட்டோரின் வரலாற்றை நம்மால் சொல்ல முடிகிறது. இது மட்டும் ஏன் சார் முடியல? என்று எதிர்கேள்வி கேட்டான். எனக்கு பதில் சொல்ல இயலவில்லை.

புதுமைப்பித்தன் படத்தை பார்த்து, ‘‘ஜிப்பா போட்டிருக்கும் இந்த மனிதர் யார்?" என்று இன்னொரு மாணவன் கேட்டான். இந்த பள்ளியில் படித்த, தமிழ் இலக்கிய உலகம் போற்றும் சிறுகதை எழுத்தாளர் என்று பதில் தெரிவித்தேன்.

‘‘தத்தரிகிட தத்தரிகிட தத்தோம்.." அப்படின்னா என்ன சார் ?’’ என்று இன்னொரு மாணவி கேட்டார். ‘‘அக்கினி குஞ்சை ஏன் சார் பாரதி காட்டிலே வைத்தார்?, குஞ்சு அக்கினியாக இருக்குமா ?, ஆறுவது சினம் என்ற அவ்வையின் ஆத்திசூடிக்கு எதிராக , பாரதி ஏன் ரவுத்திரம் பழகு? என்று எழுதினார், இதுகுறித்து விளக்குங்க என்றெல்லாம் மாணவ, மாணவிகள் கேள்விகளால் திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

அவர்களது கேள்விகள் உண்மையில் ஆச்சரியமானவை. இயல்பானவை. இவ்வளவு காலமும் நமக்கு தான் எல்லாம் தெரியுமே என்று எண்ணிக்கொண்டி ருந்த எனது தலையில் குட்டு வைத்தது போலிருந்தது இந்த கேள்விகள். இவ்வாறு கேள்விகள் கேட்ட பெருவாரியான மாணவர்கள் தமிழ் வழியில் படிப்பவர்கள். பாரதி பயின்ற வகுப்பறையில், சுமார் 1,000 மாணவர்களால் உருவாக்கப்பட்ட அவரது கொலாஜ் ஓவியம் பலரை யும் ஈர்க்கும் வண்ணம் உள்ளது என்றார் நாறும்பூ நாதன். ஓவிய ஆசிரியர் சொக்கலிங்கம் நன்றி கூறினார். காலையிலும் சத்துணவு

மதிதா இந்து மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் வறுமை கோட்டுக்கு கீழுள்ளவர்கள். இந்த பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவிகள் பலரும் காலையிலும் சத்துணவு சாப்பிடுகிறார்கள் என்பது புதிய செய்தி. காலையில் சாப்பிடக் கூட வழியில்லாமல் பெரும்பாலான மாணவர்கள் பசியுடன் வருவதை அறிந்த இப்பள்ளி ஆசிரியர்கள், தங்களது சொந்த செலவில், காலை உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

சுமார் 500 மாணவர்கள் இவ்வாறு காலை உணவு உண்கிறார்கள். மதியம் சத்துணவும் வழங்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x