Published : 28 Dec 2018 01:47 PM
Last Updated : 28 Dec 2018 01:47 PM

மதுரை ஆவின் தலைவராக ஓபிஎஸ் தம்பி பொறுப்பேற்பு: அதிமுக, பாஜகவினர் வாழ்த்து 

மதுரை ஆவின் தலைவராக துணை முதல்வரின் சகோதரர் ஓ.ராஜா பொறுப்பேற்றார். அவருக்கு அதிமுகவினர், பாஜகவினர் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மதுரை ஆவின் நிர்வாகக் குழு தேர்தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா உட்பட 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் பதவிக்கான தேர்தல் டிச.19-ம் தேதி நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு ஓ.ராஜா, துணைத் தலை வர் பதவிக்கு முன்னாள் தலைவர் தங்கம் ஆகியோர் மட்டுமே வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் இருவரும் போட்டியின்றி தேர்வாகினர்.

ஓ.ராஜாவுக்கு அன்றைய தினமே அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் அன்று மாலை ஓ.ராஜாவை அதிமுகவில் இருந்து நீக்கி முதல்வர், துணை முதல்வர் உத்தரவிட்டனர். இத னால் ஆவின் தலைவர் பதவி யை ராஜினாமா செய்வாரா என்ற பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டதாக கட்சித் தலைமை டிச.24-ல் அறிவித்தது. இதையடுத்து மதுரை ஆவினில் தலைவர் பதவியை ஓ.ராஜா நேற்று ஏற்றார். அவருடன் துணைத் தலைவராக தங்கம் மற்றும் 15 இயக்குநர்களும் பொறுப்பேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.ராஜாவிடம், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிரச்சினை தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்குப் பதில் கூறாமல், மதுரை ஆவினை தமிழகத்தில் முதல் இடத்துக்கு கொண்டு வருவேன் எனக்கூறிவிட்டுச் சென்றார்.

இயக்குநர்கள் முதல் கூட் டத்தை டிச.9-ம் தேதி கூட்டி ஆவின் செயல்பாடு குறித்து ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் தலைவராகப் பொறுப் பேற்ற ஓ.ராஜாவுக்கு எம்எல்ஏ.க் கள் வி.வி.ராஜன்செல்லப்பா, சரவணன், பெரியபுள்ளான், ஆவின் பொதுமேலாளர் ஜெய, உதவி பொது மேலாளர்கள் கார்த்திகேயன், தங்கராஜன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரி வித்தனர்.

ஓ.ராஜாவை பாஜக மாநில செயலர் ஆர்.ஸ்ரீனிவாசன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து ஸ்ரீனிவாசன் கூறும்போது, பாஜக விவசாய அணி கோட்டப் பொறுப்பாளர் வி.பழனியப்பன் ஆவின் இயக்குநராகப் பதவி ஏற்றார்.

அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தபோது, மரியாதை நிமித்தமாக ஓ.ராஜாவுக்கும் வாழ்த்து தெரி வித்தேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x