Published : 12 Dec 2018 01:31 PM
Last Updated : 12 Dec 2018 01:31 PM

5 மாநில தேர்தல் தோல்வி: பாஜகவின் ஆணவத்துக்கு மக்கள் தந்துள்ள மரண அடி- ஸ்டாலின்

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி மாநில நிர்வாகிகள் வரை ஆணவத்துடன் பேசியதற்கு மக்கள் தந்துள்ள மரண அடிதான் 5 மாநில தேர்தல் தோல்வி என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், "இதய நன்றியையும், இனிய வாழ்த்துகளையும் எம் நாட்டு மக்களுக்குத் தெரிவித்தபடி இந்தக் கடிதத்தைத் தொடங்குகிறேன். இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் சிதைக்கின்ற வகையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாசிச பாஜகவை வீழ்த்தி, மதநல்லிணக்கமும் மாநில உரிமைகளும் மக்கள் ஜனநாயகமும் காப்பாற்றப்படுகின்ற வகையில் ஒரு புதிய மெகா கூட்டணி தலைநகர் டெல்லியில் உருவாகியுள்ள நிலையில், அதற்கடுத்த நாளே அந்தக் கூட்டணியின் அடிப்படை நோக்கத்தை நாடெங்கும் வெற்றிச் செய்தியாக அறிவித்திடும் வகையில், மத்தியபிரதேசம்-ராஜஸ்தான்-சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும்போது பெரு மகிழ்ச்சி பிறக்கிறது.

அந்த மகிழ்ச்சிக்குக் காரணமாக அமைந்திருக்கும் 3 மாநில மக்களுக்கும் நன்றியையும், அங்கு வெற்றியை ஈட்டித் தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவிப்பது ஜனநாயக இயக்கமான திமுகவின் கடமையாகிறது.

இக்கட்டான நேரங்களில் எல்லாம் இந்தியாவுக்கு வழிகாட்டிய அரசியல் தலைவராக விளங்கியவர் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கருணாநிதி; இன்று அவர் இல்லை. ஆனால், இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மதவெறி-மாநில உரிமை பறிப்பு-பன்முகத்தன்மை மீதும் தனிமனிதர் பழக்க வழக்கங்களின் மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் கொடுந்தாக்குதல் என இதுவரை கண்டிராத அப்பட்டமான பாசிசம் மத்தியிலே ஆட்சி செய்தபடி ஆட்டம் போடுகிறது.

தலைவர் இன்றிருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதனை அவர் இல்லாதபோதும் அவர் வழியில் நிறைவேற்றிட திமுக தொடர்ந்து பல ஒருங்கிணைப்பு முயற்சிகளை அகில இந்திய அளவிலே உருவாக்கி வந்த நிலையில்தான், அண்ணா அறிவாலயத்தில் தலைவரின் திருவுருவச் சிலை திறப்பு விழாவின் அழைப்பிதழை நேரில் வழங்கிடும் வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்களில் ஒருவனான நான் டிசம்பர் 9 ஆம் தேதி டெல்லி சென்றேன்.

உயிர்நிகர்த் தலைவரின் உயிரோட்டமிக்க சிலையைத் திறந்து வைக்க இருப்பவர், தலைவரால் தியாகத் திருவுருவம் எனப் போற்றப்பட்ட சோனியா காந்தி. அவரது இல்லத்திற்கு நானும் திமுக முன்னோடிகளும் நேரில் சென்று அழைப்பிதழை வழங்கியபோது அவர் காட்டிய அன்பும் மதிப்பும் நெஞ்சை நெகிழ வைத்தன. தலைவரை தந்தை நிலையில் வைத்து மதிப்பளித்தவர் சோனியா காந்தி; தலைவரின் மகனான-உங்களில் ஒருவனான என்னை ஒரு சகோதரனாகக் கருதி அன்பு காட்டினார்.

திமுகவினர் சோனியா காந்தியின் வீட்டுக்கு வந்திருப்பதை அறிந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரும், இந்திய மக்களின் நம்பிக்கைக்குரிய இளந்தலைவருமான ராகுல்காந்தி தனது கட்சிப் பணிகளை முடித்துக்கொண்டு விரைந்து வந்தார். தலைவரைப் பற்றி அறிந்துகொண்டதை வியப்பு மேலிட விவரித்ததுடன், என்னிடமும் திமுக முன்னணியினரிடமும் மிகுந்த அன்பை வெளிப்படுத்தினார். உள்ளத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் நடந்த இந்த இனிமையான சந்திப்பு நிறைவுற்றபோது, சோனியா காந்தியும் ராகுல்காந்தியும் வாசல் வரை வந்து வழியனுப்பினர்.

தலைவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மூத்த தலைவர் என்ற முறையில் டெல்லி சென்றபோதெல்லாம் சோனியா இப்படித்தான் அன்புதவழ வழியனுப்புவார் என்பதை அங்கிருந்த நிர்வாகிகள் என்னிடம் பகிர்ந்துகொண்டனர். டிசம்பர் 10 ஆம் தேதியன்று, தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத்பவாருக்கு தலைவர் திருவுருவச் சிலை திறப்பு விழா அழைப்பிதழை வழங்க நானும் திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழி எம்பியும் நேரில் சென்றோம்.

தலைவரின் ஆளுமை குறித்து வியந்து பேசிய சரத்பவாரிடம் நாட்டு நிலைமை குறித்து உரையாடினேன். இந்தியாவை சிதைக்கும் நோக்குடன் செயல்படும் பாசிச மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக வலிமையான ஒருங்கிணைப்புத் தேவை என்பதை அவரிடம் வலியுறுத்தியபோது, சரத்பவாரும் அதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

அதன்பின்னர், டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான மரியாதைக்குரிய அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தேன். மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அவரும் தலைவர் இந்திய அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் அதன் விளைவுகளையும் பற்றிப் பேசினார். உரிமைகளை மீட்க வேண்டுமென்றால் வலிமையான ஒருங்கிணைப்பும் அதனடிப்படையிலான கூட்டணியும் தேவை என்பதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் வலியுறுத்தினேன்.

எல்லா தலைவர்களுமே மோடி அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மக்கள் படும் தாங்க முடியாத துயரங்களையும் தொடர்ந்து வரும் அவலங்களையும் உணர்ந்தே இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் அவசியம் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

அதே உறுதியுடன் ஒருங்கிணைந்த மெகா கூட்டணியை உருவாக்குவதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் ஆந்திர முதல்வரும்-தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபுநாயுடு முனைப்புடன் செயலாற்ற, டிசம்பர் 10-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள இணைப்புக் கட்டடத்தில் புதிய கூட்டணிக்கான  தொடக்கப்புள்ளி உருவானது.

தேசிய அளவில் மாற்று சக்தியை ஒருங்கிணைப்பதில் எப்போதும் முன் நிற்கும் திமுக இந்தக் கூட்டத்திலும் தனது பங்களிப்பை நிறைவேற்றியது. திமுகவின் வலிமையையும் தலைவரின் பேராற்றலையும் ஆளுமையையும் தேசிய அளவில் உள்ள தலைவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பதால் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி-இந்தியா சிதைவுறாமல் காப்பது என்ற ஒற்றை லட்சியத்துடன் சோனியா காந்தியின் தலைமையில் பல்வேறு கட்சிகளும் ஒன்றிணைந்து நின்ற காட்சி நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.

அனைத்துத் தலைவர்களின் மனதிலும் மதவெறிப்பிடித்த மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்திட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதை டெல்லிப் பயணத்தில் முழுமையாக உணர்ந்திட முடிந்தது. அதே எண்ணம்தான் இந்திய மக்களின் மனதிலும் இருக்கிறது என்பதை டிசம்பர்11 ஆம் நாள் வெளியான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

டெல்லியிலிருந்து சென்னை திரும்பியபோதே விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்க நேர்கையில், பாசிசத்தை வீழ்த்த மெகா கூட்டணி உருவாகியுள்ளது. இது வெற்றி பெறும் என்பதைத் தெரிவித்திருந்தேன். அதற்கு முன்னோட்டமாக, மினி நாடாளுமன்றத் தேர்தல் எனப்பட்ட 5 மாநிலத் தேர்தல்களில் 3 முக்கியமான மாநிலங்களில் பாஜக அரசை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்திருப்பது, இந்தியாவில் புதைக்கப்பட்டிருந்த ஜனநாயகம் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியதன் அடையாளமாகும்.

பன்முகத்தன்மை என்பதுதான் ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு. ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்தே அந்த பன்முகத்தன்மையை சிதைக்கும் வேலை தொடங்கியது. மதம்-மொழி-பண்பாடு என அனைத்துத் தளத்திலும் பன்முகத்தன்மையை சிதைத்த பாசிச பாஜக அரசு, ஜனநாயகத்திலும் மாற்றுக் கட்சியினரே இருக்கக்கூடாது என்கிற சர்வாதிகார சாகச மனப்பான்மையுடன், 'காங்கிரஸ் இல்லாத இந்தியா', 'கழகங்கள் இல்லாத தமிழகம்' என ஆணவத்துடன் பேசி வந்தது.

பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி மாநில நிர்வாகிகள் வரை ஆணவத்துடன் பேசியதற்கு மக்கள் தந்துள்ள மரண அடிதான், பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 5 மாநிலங்களிலும் பாஜக வீழ்த்தப்பட்டுள்ளது. பாசிசத்திற்கு எதிரான போரில் இது தொடக்க வெற்றி. இனியும் தொடரும் இந்த வெற்றி. இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் பாசிச பாஜகவும் அதன் தயவில் காலம் தள்ளும் அதிமுக அரசும் வீழ்த்தப்படுவது நிச்சயம்.

ஜனநாயக போர்க்களமான தேர்தல் களத்தில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் வெற்றிக் கொடியாக திமுகவின் வெற்றிக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும். அதற்கு முன்னோட்டமாகத்தான், திமுகவின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தின் வாயிலில், நாட்டிலேயே மிக உயர்ந்து நிற்கும் வகையில், 114 அடி உயரமும் 2430 கிலோ எடையும் கொண்ட கொடிக்கம்பத்தில் இருபதுக்கு முப்பது அடி என்ற பிரம்மாண்ட அளவிலான கழகக் கொடியினை டிசம்பர் 12 ஆம் நாள் உங்களில் ஒருவனான நான் ஏற்றி வைத்தேன்.

உயர்ந்து பறக்கும் அந்தக் கொடி நம் கொள்கையை உலகுக்குப் பறைசாற்றுவதுபோல அசைந்து கொண்டே இருக்கும். இரவிலும் அது பட்டொளி வீசிப் பறப்பதைக் காணும் வகையில் கொடிக்கம்பத்தில் இரண்டு ஹைபீம் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பகலிரவு பாராமல் நாம் பாடுபட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தானியங்கி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மும்பையில் இருவண்ணக் கொடி தயாரிக்கப்பட்டது. புனேயில் கொடிக் கம்பம் உருவாக்கப்பட்டது. எல்லாத் திசையும் ஒன்று சேர்ந்து நின்று, கொள்கை முழக்கம் எழுப்ப வேண்டிய தருணம் இது என்பதை உணர்த்திடும் வகையில் திமுகவின் இருவண்ணக் கொடி அண்ணா அறிவாலயம் வாயிலில் தலைவரின் புகழைப் பாடுவதுபோல பறக்கிறது.

விரைவில் வெற்றிக்  கொடி பறக்கும் இந்திய அளவிலும், தமிழ்நாட்டிலும்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x