Published : 23 Sep 2014 10:40 AM
Last Updated : 23 Sep 2014 10:40 AM

திருவண்ணாமலையில் 10 ஆண்டுகளாக தொடரும் திருக்குறள் தொண்டு

திருவண்ணாமலையில், ஆன்மிக வழிபாடுகள் மற்றும் ஞான உபதேசங்களுக்கு குறைவில்லை. அந்த வரிசையில் உலகமே போற்றும் திருக்குறளை ஆன்மிக பூமியான திருவண்ணாமலையில் வாழும் மக்களிடமும், இங்கு வரும் பக்தர்களிடமும் கொண்டுசெல்லும் பணியை செவ்வென செய்து வருகிறது திருக்குறள் தொண்டுமையம். 10 ஆண்டு பணிகள் குறித்து,மையத்தின் நிறுவனரும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஓய்வுபெற்ற மேற்பார்வையாளருமான ப.குப்பன் விளக்கினார்.

அவர் கூறும்போது, “சிறு வயதில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றதே திருக்குறள் தொண்டு மையம் தொடங்க காரணமாக இருந்தது. பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, ஜனவரி 2005-ல் மையத்தை தொடங்கினேன். செயலாளர் க.சண்முகம், கோவிந்தராசன், சுப்ரமணி, சிவலிங்கம், கோவிந்தசாமி, வைத்தியலிங்கம் ஆகியோருடன் இணைந்து திருக்குறள் தொண்டு பணியை செய்து வருகிறேன். அனைத்து சாதி, மதத்தினருக்கும் பொதுவான திருக்குறளைப் படித்து, அதில் கூறியுள்ள பொருள்படி செயல்பட்டால், உலகில் சண்டை இருக்காது. அமைதி மட்டும் நிலவும்.

மணமுறிவு இருக்காது

புலால் உண்ணக்கூடாது, பொய் சொல்லக் கூடாது, பொறாமைப்படக் கூடாது, அன்பாகவும், இரக்க குணத்துடன் வாழ வேண்டும் போன்ற பல கருத்துகளை குறள் எடுத்துரைக்கிறது. இன்றைய காலத்தில் மணமுறிவு அதிகம் உள்ளது. திருக்குறள் படித்து, அதன்படி செயல்பட்டால் மணமுறிவே இருக்காது. அன்பு மேலோங்கி இருக்கும்.

கணவன், மனைவி, குழந்தை, அரசன், தொண்டன், குடிமகன் என்று எல்லோரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று திருக்குறள் கூறுகிறது. பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டாலும், திருக்குறளை படித்து பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. திருக்குறளை தினமும் படித்து பின்பற்றி நடந்தால், தெய்வங்கள் அளவுக்கு மனிதன் உயர வாய்ப்புள்ளது.

700 வீடுகளில் திருக்குறள்

திருக்குறள் மற்றும் அதில் கூறியுள்ள கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக, எனது வீட்டின் முன்பு பலகையை மாட்டி, தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் பொருளையும் எழுதினேன். பின்னர், ஒவ்வொரு வீடுகள் முன்பும் திருக்குறளை எழுதும் பணியை தொடங்கினோம். வீட்டின் சுவரில் 1 அடி உயரம், 4 அடி அகலத்தில் நீல நிறத்தை பூசி, அதில் ஒரு திருக்குறள் எழுதப்படுகிறது.

ஆண்டுக்கு 100 வீடுகள் என்ற இலக்கைக் கொண்டு, இதுவரை 700 வீடுகளில் திருக்குறளை எழுதியுள்ளோம்.

மக்களும் விரும்பி எழுதச் சொல்கிறார்கள். தங்கள் இல்லத்தில் உள்ள முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தி, அதற்கு பொருளுடைய திருக்குறளை எழுதச் சொல்கிறார்கள். எனது ஓய்வூதிய நிதியைக் கொண்டு செலவு செய்கிறேன்.

திருக்குறள் ஓதி திருமணம்

மேலும், ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அண்ணாமலையார் கோயில் மதில் சுவர்களைச் சுற்றியும், சனிக்கிழமை மாட வீதிகளைச் சுற்றியும், திருக்குறளை படித்துக்கொண்டு வலம் வருகிறோம். மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை திருக்குறளை ஓதி, கிரிவலம் வருகிறோம். இப்பணியில் கடந்த 84 மாதங்களாக ஈடுபட்டுள்ளோம்.

இதேபோன்று, பவுர்ணமியன்று “முழுநிலவு முற்றோதல்” என்று ராஜராஜன் வீதி சந்திப்பில் திருக்குறள் படிக்கிறோம்.

அப்போது கிரிவலம் செல்லும் பக்தர்களும் வந்து திருக்குறளை படிப்பார்கள். எங்கள் பணியில் மிக முக்கியமானது, திருக்குறள் ஓதி 4 திருமணங்கள் மற்றும் 2 புதுமனை புகுவிழாக்களை நடத்தியது. திருக்குறளில் கூறியுள்ள கருத்துபடி அனைவரும் செயல்பட வேண்டும். எனது உயிர் உள்ளவரை இப்பணி தொடரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x