Published : 07 Dec 2018 10:57 AM
Last Updated : 07 Dec 2018 10:57 AM

அதிமுக மீது இனி எந்த ஒரு தனிப்பட்ட குடும்பமும் ஆதிக்கம் செலுத்த முடியாது: ஓபிஎஸ்

அதிமுக மீது இனி எந்த ஒரு தனிப்பட்ட குடும்பமும் ஆதிக்கம் செலுத்த முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் இக்கருத்தினை அவர் பலமுறை வலியுறுத்தினார்.

வி.கே.சசிகலா குடும்பத்தினர் தந்த ஆதரவு காரணமாக மட்டுமே கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருந்தும் நீங்கள் 2001 செப்டம்பரில் முதல்வராக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறதே?

இந்த கேள்விக்கு கடந்த காலங்களிலும் பலமுறை நான் பதில் சொல்லிவிட்டேன். மார்ச் 2002-ல் அம்மா முதல்வரான பிறகு நான் அமைச்சராக்கப்பட்டேன். என் வசம் 9 இலாகாக்கள் ஒப்படைக்கப்பட்டன. அப்போது அவரே என்னிடம் தெளிவுபடுத்தினார். என்னை முதல்வராக்கியவர் அவர்தான் அவர்மட்டும் தான் என்பதை தெளிவாக உணர்த்தினார்.

செப்டம்பர் 2014-ல் பெங்களூரு நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்னரே இடைவேளையின்போது அவர் என்னை அழைத்தார். தமிழகத்தின் முதல்வராக நான் இருக்க வேண்டும் என்றார். அதை நானே கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் சொன்னால் பலம் பொருந்தியதாக இருக்காது என நினைத்ததால் நத்தம் விஸ்வநாதனை அழைத்தார்.

நத்தம் விஸ்வநாதன் அப்போது மின் துறை அமைச்சராக இருந்தார். அவரிடம் கட்சி கூட்டத்தைக் கூட்டி தனது உத்தரவின் பேரிலேயே ஓபிஎஸ் முதல்வராக்கப்படுவதாக அறிவிக்கச் சொன்னார். அந்த அளவுக்கு அம்மா தனது முடிவுகளில் தெளிவாகவே இருந்தார். தனிப்பட்ட நெருக்கடிகளில் இருந்தபோதும்கூட அவர் தெளிவாகவே முடிவு எடுத்தார். அவரது அந்த முடிவு அவர் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் அடையாளம்.

ஜெயலலிதாவுடன் உங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?

டான்சி நில பேர வழக்கு ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டபோது அம்மா என்னை பாராட்டிப் பேசியதும் 2005-ல் எனது மகனின் திருமண விழாவில் பேசியதுமே எனக்கு நினைவில் இருக்கிறது.

2017 ஏப்ரலில் தி இந்து பத்திரிகைக்கு நீங்கள் அளித்த பேட்டியில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்ல வேண்டும் என்று நீங்கள் பலமுறை வலியுறுத்தியதாக சொன்னீர்கள். இதனை சசிகலாவிடம் சொன்னீர்களா?

இல்லை. இந்த கருத்தை நான் முதன்முதலில் மக்களை துணை சபாநாயகர் தம்பிதுரையிடம்தான் சொன்னேன். அவருக்கும் அந்த யோசனையில் உடன்பாடு இருந்தது. அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 35 நாட்கள் ஆன நிலையில் எந்த ஒரு அமைச்சரும் அம்மாவைப் பார்க்க முடியாத சூழல் இருந்த நிலையிலேயே நான் அந்த யோசனையை சொன்னேன்.

இது குறித்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடமும் பேசினேன். அவர்கள்தான் அம்மாவுக்கு மருத்துவர்களை ஏற்பாடு செய்துகொண்டிருந்தனர். அடுத்தநாள், அப்பலோ நிறுவன சேர்மன் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜய் குமார் ரெட்டி என்னிடம் அம்மாவின் உடல் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர். கண்டிப்பாக அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றனர். அப்படிச் சொன்ன பிறகு வெளிநாட்டு சிகிச்சை யோசனையை நான் விட்டுவிட்டேன்.

செப்டம்பர் 2017-ல் ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிகள் இணைந்தபின்னர் கட்சி எப்படி நடைபெறுகிறது?

கட்சி சுமுகமாக நடைபெறுகிறது. எந்த ஒரு நிபந்தனையும் விதிக்காமல்தான் நான் இணைப்புக்கு சம்மதித்தேன். அம்மாவால் அமைக்கப்பட்ட ஆட்சி ஆட்டம் காணக்கூடாது என்பதே எனது இலக்காக இருந்தது. அதுமட்டுமல்லாமல் தினகரன் அப்போது ஆட்சியை கவிழ்க்க எல்லாவிதமான சதிகளையும் செய்து கொண்டிருந்தார். நான் தர்மயுத்தம் தொடங்கியதற்கான நோக்கம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்காகவே இணைப்புக்கு சம்மதித்தேன்.

சசிகலாவுக்கு எதிராக நீங்கள் தர்மயுத்தம் தொடங்க துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி காரணமாக இருந்தாரா?

இல்லை. எனது மனசாட்சிப்படி நான் நடந்தேன். மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் என மற்றவர்களும் எனது பிரச்சாரத்துக்கு துணை நின்றனர்.

பழனிசாமியுடன் பணியாற்றுவதை எப்படிப் இருக்கிறது?

அதில் ஒரு சிக்கலும் இல்லை. அவர் என்னிடம் அடிக்கடி ஆலோசனை கேட்பதுண்டும். எதிர்க்கட்சியினர்தான் மக்களிடமும் கட்சியினர் மத்தியிலும், ஏதோ எனக்கும் ஈபிஎஸ்-க்கும் இடையே ஒற்றுமை இல்லை என்பதைப் போன்ற தோற்றத்தை கடும் பிரய்தனத்துடன் பரப்பி வருகின்றனர். அவர்களுக்கு ஒரு சில ஊடகங்கள் ஆதரவாக செயல்படுகின்றன.

தென் மாவட்டங்களில் அதிமுக செல்வாக்கை அமமுக தலைவர் டிடிவி தினகரன் அழித்திருக்கிறாரா?

அதிருப்தியாளர்கள் மட்டுமே தினகரன் பக்கம் உள்ளனர். எங்கள் அடித்தளம் உறுதியாகவே இருக்கிறது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக ஆட்டம் கண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை உறுதி செய்வதுபோல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி, கருத்து கணிப்புகள் ஆகியன உள்ளன. உங்கள் கருத்து?

கருத்து கணிப்புகள் இறுதி முடிவல்ல. ஏனெனில் இதற்கு முன்னர் பல தருணங்களில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல்களில் கருத்துக் கணிப்புகள் பொய்யாகி உள்ளன. அதுபோல் கட்சி வலுவிழந்துவிட்டதாக சொல்லப்படுவதை நான் உறுதியாக நிராகரிக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சி எப்போதுமே நியாயமான கட்டமைப்பாகவே இருந்துள்ளது. ஆனால், திமுகவின் அடையாளமோ வன்முறையாகவே தெரிந்திருக்கிறது.

கட்சி நலனுக்குக்காக தினகரன் அணியை அதிமுகவுடன் இணைக்க சாத்தியமிருக்கிறதா?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும் சரி அம்மாவும் சரி கட்சியில் தனிப்பட்ட குடும்பம் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்தே வந்துள்ளனர். திமுகவில் இருந்தபோதே எம்.ஜி.அர் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து கருணாநிதியுடன் சண்டையிட்டார். அம்மாவும் அதே வழியில்தான் சென்றார். சசிகலாவைத் தவிர குடும்பத்தில் யாரையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

அப்படி இருக்கும்போது அதிலிருந்து விலகிச் சென்றால் அது அம்மாவுக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகிவிடும். சசிகலாவை விட்டுத்தள்ளுங்கள் இனிமேல் கட்சியின் மீது எந்த ஒரு தனிப்பட்ட குடும்பமும் ஆதிக்கம் செலுத்த இயலாது. ஜனநாயக முறைப்படி கட்சியின் எந்த ஒரு கடைநிலை தொண்டரும்கூட தலைமைப் பொறுப்புக்கு வரலாம். அப்படித்தான் நானும் ஈபிஎஸ்-ஸும் முன்னுக்கு வந்தோம்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் மன்னிப்பு கோரினால் ஏற்றுக் கொள்வீர்களா?

அதை கட்சி முடிவு செய்யும்.

அதிமுக பாஜகவின் பி டீம் என்ற விமர்சனத்துக்கு உங்கள் பதில் என்ன?

அது தவறானது. செயற்கையான பார்வை. அதிமுக ஒரு தனிப்பட்ட கட்சி. எங்களது அரசு மாநில உரிமைகளுக்காக வாழ்வாதார பிரச்சினைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சி நடத்துபவர்களின் ஆணைகளுக்கு இணங்க நாங்கள் இங்கு ஆட்சி நடத்த எங்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை. ஆனால், திமுகவின் கதை வேறு.

ஆனால்,  குடியரசு தலைவர்  தேர்தலின்போதும் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போதும் நீங்கள் பாஜகவை ஆதரித்தீர்களே..?

குடியரசு தலைவர் தேர்தலின் போது எங்களிடம் ஆதரவு கோரப்பட்டது. அதுமட்டுமல்லாமல் குடியரசு தலைவர் வேட்பாளர் தலித் என்பதாலும் ஆதரித்தோம்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய அரசை ஆதரித்தோம். ஆம். ஏனெனில், ஒரு நிலையான அரசை நாங்கள் சீர்குலைக்க விரும்பவில்லை. தேர்தலை திணிக்க விரும்பவில்லை.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அணி சேர்வீர்களா? வேறு ஏதும் கூட்டணி யோசனை இருக்கிறதா?

ஒருமித்த கருத்துடைய கட்சிகள் எங்களை அணுகினால் அந்த வேளையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அது குறித்து முடிவு செய்வார்கள்.

- தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x