சீன பொறியாளரின் துண்டான கைவிரல்கள் 22 மணி நேரத்துக்குப் பிறகு இணைப்பு: கோவை கங்கா மருத்துவமனையில் சாதனை

சீன பொறியாளரின் துண்டான கைவிரல்கள் 22 மணி நேரத்துக்குப் பிறகு இணைப்பு: கோவை கங்கா மருத்துவமனையில் சாதனை
Updated on
1 min read

சீன பொறியாளரின் துண்டான கைவிரல்களை 22 மணி நேரத்துக்குப் பிறகு மைக்ரோ அறுவைசிகிச்சை மூலம் இணைத்து, கோவை கங்கா மருத்துவமனை சாதனை புரிந்துள்ளது.

இதுகுறித்து கங்கா மருத்துவமனையின் பிளாஸ்டிக், கை மற்றும் மைக்ரோ அறுவைசிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.ராஜசபாபதி கூறியதாவது:

சீனாவைச் சேர்ந்தவர் கௌ ரோங் (25). பொறியாளரான இவர், தொழிற்சாலைகளில் புதிய இயந்திரங்களை அமைப்பதில் நிபுணர். மகாராஷ்டிர மாநிலம் ஒளரங்காபாத்தில் அமைய உள்ள புதிய தொழிற்சாலையில், இயந்திரங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

கடந்த 17-ம் தேதி நேரிட்ட விபத்தில் இவரது இடது கையின் ஆட்காட்டி விரல் மற்றும் கட்டை விரல் துண்டிக்கப்பட்டது. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவருக்கு முதலுதவி செய்துள்ளனர். அவரது விரல்கள் சாய்வான நிலையில் துண்டிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் இணைப்பது கடினம் என்றும், கோவை கங்கா மருத்துவமனைக்கு உடனடியாக சென்றால் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, துண்டிக்கப்பட்ட பாகங்களை பிளாஸ்டிக் பையில்போட்டு, சுற்றிலும் ஐஸ் கட்டிகளை வைத்து பேக்கிங் செய்துள்ளனர். பின்னர், அங்கிருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனேவுக்கு காரில் வந்து, பின்னர் சென்னை வந்து, அங்கிருந்து கோவை வந்துள்ளனர். விபத்து நேரிட்ட 22 மணி நேரத்துக்குப் பிறகு கோவை கங்கா மருத்துவமனைக்கு வந்தனர்.

கங்கா மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் ஹரி வெங்கட்ரமணி தலைமையிலான மருத்துவக் குழுவினர், மூன்று மணி நேர மைக்ரோ அறுவைசிகிச்சை மூலம், 0.5 மில்லிமீட்டர் முதல் ஒரு மில்லிமீட்டர் வரையிலான ரத்த நாளங்களை இணைத்து, ஆட்காட்டி விரலை இணைத்தனர். பிறகு, கட்டைவிரலையும் இணைத்தனர். கைவிரல்கள் மீண்டும் இணைக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்த கௌ ரோங், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

விபத்தால் துண்டிக்கப்பட்ட பாகங்களை பிளாஸ்டிக் பையில் வைத்து இறுக்கமாக மூடி, சுற்றிலும் ஐஸ் கட்டிகளை முறையாக வைத்து, மருத்துவமனைக்கு கொண்டுவந்தால், துண்டிக்கப்பட்ட பாகங்களை மீண்டும் இணைக்கமுடியும்.

ஏற்கெனவே, விபத்து நேரிட்ட 36 மணி நேரத்துக்குப் பிறகு, துண்டிக்கப்பட்ட விரல்களுடன் சவுதி அரேபியாவில் இருந்து வந்த நோயாளிக்கு கங்கா மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர்கள் மீண்டும் இணைத்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு டாக்டர் ராஜசபாபதி கூறினார். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in