Published : 18 Dec 2018 07:58 PM
Last Updated : 18 Dec 2018 07:58 PM

பொன் மாணிக்கவேல் மிரட்டுகிறார்; எங்களை விடுவியுங்கள்: சிலைகடத்தல் தடுப்பு போலீஸார் டிஜிபியிடம் புகார்

சாட்சி, ஆவணங்கள் இல்லாமல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடும் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தங்களை மிரட்டி வருவதால் தங்களை விடுவிக்கும்படி சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸார் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.

சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டிஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் சில நடவடிக்கைகளை எடுத்தார். அவரது நடவடிக்கைகள் பெரும்பாலும் விளம்பரப்படுத்தப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. சாதாரண இன்ஸ்பெக்டர் பிடிக்கும் சிலைகளை இவரே விரட்டிச் சென்று பிடிப்பது, ஊடகங்களை முன்கூட்டியே வரச்சொல்லி பேட்டி அளிப்பது என விளம்பர வேலையை பார்த்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில் ஐஜியாக பதவி உயர்வுப்பெற்றார். ரயில்வே ஐஜியாக அவர் நியமிக்கப்பட்டார். சிலைக்கடத்தல் வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் உயர் நீதிமன்றம் பொன்மாணிக்கவேலை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜியாக நியமித்தது. அவரை மாற்றக்கூடாது என உத்தரவும் இட்டது. இதையடுத்து பொன்மாணிக்கவேல் பல சிலைகளை கைப்பற்றினார்.

சிலைக்கடத்தல் நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் சிலைகளுக்கு மதிப்பு நான் சொல்ல முடியாது என்று சொல்லி வந்தவர் பின்னர் அவரே இவ்வளவு மதிப்பு என சொல்ல ஆரம்பித்தார். சிலைக்கடத்தல் வழக்கில் இந்து அறைநிலையத்துறை அதிகாரிகள் சிலரின் செயலால் ஏற்பட்ட கெட்டப்பெயரை வைத்து ஒட்டுமொத்த துறையினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது விசாரணை இல்லாமல் கைது செய்வது என பொன் மாணிக்கவேலின் நடவடிக்கையால் அறநிலையத்துறை சங்கங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தது.

கூடுதல் இயக்குனர் அந்தஸ்த்தில் இருந்த கவிதாவை திடீரென கைது செய்தது அறநிலையத்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அறநிலையத் துறையைப் பற்றிய பொதுவெளியில் கடும் விமர்சனம் வந்தது. இந்நிலையில் தான் ஓய்வு பெறுவதற்கு முன் தன்மீது நடவடிக்கை வரும் என்பதால் அதை நீதிமன்றத்தில் தெரிவித்து தடைப்பெற்றார். பின்னர் ஓய்வுப்பெற்ற அவர் நீதிமன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

விசாரணை சாட்சி இல்லாமல் பொன் மாணிக்கவேல் சகட்டுமேனிக்கு அரசு அதிகாரிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் டிஜிபி டி.கே.ராஜேந்திரனை சந்தித்து பொன் மாணிக்கவேல் மீது புகார் அளித்துள்ளனர்.

கூடுதல் எஸ்பி இளங்கோ, டிஎஸ்பி பழனிச்செல்வன், இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 உதவி ஆய்வாளர்கள் பொன் மாணிக்கவேல் குறித்து புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் தெரிவித்து அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.

இதுகுறித்து டிஜிபி அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை ஒன்று வந்துள்ளது. அதில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் மீது டிஜிபியை சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதில் தங்களை சாட்சி, ஆவணங்கள் இல்லாமல் சட்டத்திற்கு முரணாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யச் சொல்லி பொன்மாணிக்கவேல் உத்தரவிடுகிறார் செய்யாத அதிகாரிகளை திட்டியும், மிரட்டியும் வருகிறார்.
ஆகவே தங்களுக்கு பணி மாறுதல் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர், அவர்கள் மனுமீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொன் மாணிக்கவேல் விளம்பரம் தேடி கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டுகிறார் என்கிற விமர்சனம் அவருக்கு கீழ் உள்ள அதிகாரிகள் புகார் காரணமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x