

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாங்கள் அமைத்த மக்கள் நலக்கூட்டணி ‘ஜீரோ’தான் என்ற வைகோ தெரிவித்த கருத்துக்கு, அந்தக் கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், ‘‘அடுத்த தேர்தல் வந்துவிட்டது, அதைப் பற்றி கேளுங்கள், ’’ என்று கூறி அதற்கு நேரடியான பதில் அளிக்க மறுத்தார்.
மதுரையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘5 மாநிலத் தேர்தல் முடிவுகளுக்கு, பாஜக அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளே காரணம். மேகேதாட்டுவில் கர்நாடகா அரசு அணை கட்டினால் தமிழகம் பாலைவனமாக மாறும். அதனால், இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து போராட முன் வேண்டும். வறட்சியால் தமிழகத்தில் தற்போது நெல்லுக்கு பதில் விவசாயிகள் மக்காசோளம் சாகுபடி செய்கினறனர். மக்காசோளப் பயிர்களிலும் தற்போது அமெரிக்கன் புழு தாக்குததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல், பாசனப் பிரச்சினை, நோய் தாக்குததால் தமிழக விவசாயிகள் பெரும் அழிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர், ’’ என்றார்.
அவரைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியதாவது:
''கஜா புயல் தாக்கி ஒரு மாதம் ஆகப்போகிறது. இன்னும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட புயல் பாதித்த 12 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. நகரப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக அல்ல. அதுபோல், கிராமங்களில் முழுமையாக மின்சாரம் கொடுக்கப்படவில்லை. இன்றும், இந்த மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளது. அரசு அறிவித்த பாதிப்பும், நிவாரணமும் குறைவாக உள்ளது. பாதிப்பின் அளவை அரசு குறைக்க முயலுகிறது. பயனாளிகளின் எண்ணிக்கையையும் மிகக் குறைவாக மதிப்பீடு செய்கின்றனர்.
புயல் பாதிப்பு தொடர்பாக தொடக்கத்தில் முதல்வர் கூறியதற்கும், தற்போது நிவாரணம் வழங்கக்கூடிய கணக்கீடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் உள்ளது. தற்போது நீதிமன்றத்தில் மத்திய அரசு, இன்னும் தமிழக அரசு முழுமையான அறிக்கை அனுப்பவில்லை என்றும், நாங்கள் கேட்ட விவரங்களையும் தரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பிரதமரும் பாதித்த மாவட்டங்களைப் பார்க்க வரவில்லை. அவருக்கு நேரமில்லை என்று ஒற்றை வரியில் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் பதில் கூறுகிறார். முதல்வரும் முழுமையான ஆய்வை மேற்கொள்ளவில்லை. புயல் பாதிப்பு தமிழக அரசு ஒரு ஹேக்டேருக்கு ரூ.13,500 அறிவித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம். இந்த தொகையை அதிகரிக்க வேண்டும். மரங்களில் குறிப்பாக தென்னை மரத்திற்கு ஒரு மரத்திற்கு ரூ.600, அப்புறப்படுத்த ரூ.500 மொத்தம் ரூ.1,100 என்று அரசு அறிவித்துள்ளது. இது ஏற்புடையது இல்லை.
விவசாயிகள் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்காக ஒரு மரத்திற்கு இடத்தோடு சேர்த்து ரூ.50 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அடிப்படையிலே பாரபட்சமில்லாமல் இடத்தைத் தவிர்த்து தென்னை மரத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்க சொல்லி தமிழக அரசை வலியுறுத்துகிறோம். புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஆனால், மாநில அரசு, புயல் பாதித்த மாவட்டங்களாக என அறிவித்துள்ளது.
மத்திய அரசு கேட்கும் ஆவணங்களையும், அறிக்கைகளையும் உடனே தமிழக அரசு வழங்க வேண்டும். வருகிற 18-ம் தேதி நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களுடன் சேர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் வெளிநாட்டு கறுப்புப் பணம் 100 நாளில் மீட்கப்படும். அந்தப் பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகன் பெயரிலும் அவர்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் சேர்க்கப்படும் என்றும், 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என்றும், விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என்றும், விலைவாசி குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நான்கு முக்கிய கோரிக்கைகளில் ஒன்றைக் கூட நிறைவேற்ற முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. ஆலை நிர்வாகத்திற்கு அவர்கள் சாதகமாகச் செயல்படுகின்றனர்’’.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து முத்தரசனிடம், ‘‘மக்கள் நலக்கூட்டணி ஜீரோ ஆனது உண்மைதான், ஒரு சீட் கூட ஜெயிக்கவில்லைதானே, அப்படின்னால் ‘ஜீரோ’தான் என்ற தெரிவித்துள்ளாரே, அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான அவரே இப்படியொரு கருத்தை தெரிவித்துள்ளாரே? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?, ’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு முத்தரசன், ‘‘அடுத்த தேர்தல் வந்துவிட்டது, அதைப் பற்றி கேளுங்கள் ’’ என்று மழுப்பிவிட்டுப் பதில் கூற மறுத்துவிட்டார்.