

உள்ளாட்சி இடைத்தேர்தலில், உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனின் சொந்த தொகுதியில் அதிமுக வேட்பாளர் தோல்வியடைந்ததால் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி யில் வெற்றிபெற்று, உயர்கல்வித் துறை அமைச்சர் பதவியையும் பெற்றவர் பழனியப்பன். இவர் தொகுதிக்கு உட்பட்ட மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் 16-வது வார்டுக்கு (கேத்துரெட்டிப்பட்டி) நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கோவிந்தம்மாள் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, பாமக-வின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ராதா, மற்றொரு சுயேச்சை வேட்பாளர் வாசுகி ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த வார்டில் மொத்தம் 3,752 வாக்காளர்கள் உள்ளனர். அதில் 2,843 பேர் வாக்களித்தனர்.
எண்ணிக்கை தொடங்கியதும் அதிமுக வேட்பாளர் கோவிந் தம்மாள், பாமக ஆதரவு வேட் பாளர் ராதா ஆகிய இருவருக்கும் இடையில்தான் பலமான போட்டி நிலவியது. இறுதியில் ராதா 1,552 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கோவிந்தம்மாளுக்கு 1,242 வாக்குகள் கிடைத்தன. மற்றொரு சுயேச்சை வேட்பாளர் வாசுகி 11 வாக்குகள் பெற்றார். செல்லாத வாக்குகள் 38.
அதிமுக வேட்பாளர் கோவிந்தம் மாளைவிட பாமக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் ராதா 310 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியடைந்தார். தமிழக அமைச்சரவையில் முக்கிய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனின் தொகுதியில் இப்படியொரு தேர்தல் முடிவு வந்திருப்பது அமைச்சர் மற்றும் அதிமுக-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.