Published : 07 Dec 2018 03:27 PM
Last Updated : 07 Dec 2018 03:27 PM

50 இடங்களில் செல்போன் பறிப்பு: பப்களில் பாடும் கரோகி பாடகர் கூட்டாளியுடன் கைது

50-க்கும் மேற்பட்ட இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட கரோகி பாடகர் போலீஸ் பொறியில் சிக்கினார். அவரது கூட்டாளியும் சிக்கினார். அவரிடமிருந்து 15 செல்போன்களை போலீஸார் கைப்பற்றினர்.

தி.நகர், தேனாம்பேட்டை, பாண்டிபசார், மாம்பலம், கோடம்பாக்கம், அஷோக்நகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த வாரத்தில் அடுத்தடுத்து பலரிடம் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தது. இதை அடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தி.நகர் துணை ஆணையரின் தனிப்படை களத்தில் இறங்கியது.

செல்போன் பறிப்பு நடந்த இடங்களில் கண்காணிப்பு கேமரா பதிவு, செல்போன் ஐஎம்இஐ எண் மற்றும் செல்போன் எண்களை வைத்து ட்ரேஸ் செய்ததில் வழிப்பறி நபர் ஆக்டிவா இருசக்கர வாகனத்தை பயன்படுத்துவது தெரியவந்தது. அவரது செல்போன் எண்ணையும் போலீஸார் கைப்பற்றி ட்ரேஸ் செய்ய தொடங்கினர்.

ஆனால் அந்த நபர் ஆக்டிவா வாகனத்தை விட்டுவிட்டு புதிய வாகனம் ஒன்றை வாங்கி அதில் குற்றச்செயலில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த நபரை பிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதில் அந்த நபர் தனது காதலியைப்பார்க்க வந்தபோது போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில் அவர் பெயர்  சென்னை மடிப்பாக்கம், ஏரிக்கரை தெருவைச்சேர்ந்த சேர்ந்த அசார் அலி (28) என்பதும் அவர் ஏற்கெனவே தி.நகர் சத்தியா பசாரில் செல்போன் கடை வைத்திருந்து அதன்மூலம் சத்யா பசாரில் வழிப்பறி செய்து கொண்டு வரப்படும் செல்போன்களை இவரும், பக்கத்துக்கடைக்காரரான விருதுநகர், திருச்சுழியைச் சேர்ந்த  ரஷீத் அஹமதும் (23) வாங்கி விற்று வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் கிண்டி போலீஸில் அசார் அலி சிக்க சத்யா பசார் கடையை இழுத்துமூடும் நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் வருமானத்துக்காக அன்சர் அலி கிளப்புகளில், பப்களில் கரோகி பாடல் பாடி பிழைத்து வந்துள்ளார். அதில் வருமானம் குறையவே என்ன செய்வது என்று யோசித்துள்ளார்.

ஏற்கெனவே திருட்டு செல்போன்களை வாங்கிவிற்ற வகையில் பல குற்றவாளிகளுடன் உள்ள தொடர்பில் மீண்டும் செல்போன் திருட்டு தொழிலில் இறங்க முடிவு செய்துள்ளார்.

இம்முறை தானே நேரடியாக செல்போன் பறிப்பில் ஈடுபடுவது என்று முடிவு செய்து நேரடியாக களம் இறங்கியுள்ளார்.

தனது கூட்டாளியாக விக்கி (எ) காட்டுப்பூனை என்பவனை சேர்த்துக்கொண்டு தனது ஆக்டிவா வாகனத்தில் சென்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். குறுகிய நாட்களில் தி.நகர், தேனாம்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், பாண்டிபசார் என சுற்றி சுற்றி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதனால் அவருக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. செல்போன்களை தனது நண்பரான ரஷீத்திடம் விற்றுள்ளார். ரஷீத் சில செல்போன்களை பர்மா பசாரிலும், பல செல்போன்களை ஓஎல்எக்சில் விளம்பரம் மூலம் வாடிக்கையாளரிடம் விற்றுள்ளார்.

அசார் அலிக்கு வருமானம் கூடவே தனது இருசக்கர வாகனத்தை விற்றுவிட்டு புதிதாக இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். ஏற்கெனவே திருமணமான அசார் அலிக்கு கூடுதலாக டான்ஸர் ஒருவரும் நெருக்கமாகி உள்ளார். அவரைப்பார்க்க வரும்போதுதான் போலீஸார் பிடித்துள்ளனர்.

அசார்அலி கொடுத்த தகவலின்பேரில் ரஷீதை கைது செய்து போலீஸார் 15 செல்போன்களை கைப்பற்றியுள்ளனர். மேலும் செல்போன்களை கைப்பற்றவும், தப்பி ஓடிய விக்கி (எ) காட்டுப்பூனைய பிடிக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x