

திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரம் பேருக்கு புயல் பாதிப்பு நிவாரணத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத் திட்டங்களில் ஒன்றான விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்களுக்கு இக்கல்வி ஆண்டுக்கு வழங்குவதற்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்ட தொடக்க விழா திருவாரூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மாரிமுத்து வரவேற்றார். தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகள் 22,710 பேருக்கு, ரூ. 8.43 கோடி மதிப்பிலான, விலையில்லா சைக்கிள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், ''புயல் பாதிப்பு கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 32 ஆயிரம் பேருக்கு புயல் பாதிப்பு நிவாரணத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி அறிவித்த 27 பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிப் பொருட்கள் எண்ணிக்கையில் குறைவு இருப்பதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறு'' என்று தெரிவித்தார்.
வீடியோவைக் காண: https://www.facebook.com/TamilTheHindu/videos/275144490020961/