

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசியப் பொதுச்செயலர் ராம் மாதவ், தமிழகத்தில் தேர்தல் கூட்டணிக்கு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சி என்ற திட்டத்துக்கு ஒத்து வரும் கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார் ராம் மாதவ்.
மேலும் திமுக மீது சூசகமாக விமர்சனம் வைத்த ராம் மாதவ், “பொய்யர்களுடனும் ஊழல்வாதிகளுடனும், ஜாமினில் வெளியில் உள்ளோருடனும் பயணிப்பவர்கள் பயணிக்கட்டும்” என்றார்.
திமுக மோசமான ஒரு கூட்டணியில் உள்ளது என்று கூறியதற்கு விளக்கம் கேட்ட போது, “அவர்கள் அம்மாதிரியான கூட்டணியில்தான் இருப்பார்கள் என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின், தொடர்ச்சியாக பிரதமர் மோடியை பாசிஸ்ட் என்று விமர்சிப்பது குறித்து ராம் மாதவ் கூறும்போது, “அவர் பெயரே ஸ்டாலின் தான் (ரஷ்ய முன்னாள் தலைவர் ஜோஸப் ஸ்டாலினை சூசகமாகக் குறிப்பிட்டு) ஆனால் இவர் மற்றவர்களை பாசிஸ்ட் என்று அழைக்கிறார். இந்த மாநிலத்தில் திமுக ஆட்சியில் நாங்கள் பாசிசத்தைப் பார்த்திருக்கிறோம். ஆகவே அவர்கள் முதலில் கண்ணாடியைப் பார்ப்பது நல்லது.
அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் தேஜகூவுடன் திமுக கூட்டணியில் இருந்த போது இரு கட்சிகளுக்கும் இடையே நல்ல சமன்பாடு நிலவியது, ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் போய் சேர்ந்தவுடன் என்ன ஆனது? காங்கிரஸ் ஊழல் கம்பெனி இவர்களை சிறைக்குள் தள்ளியது” என்றார்.
ரஃபேல் விவாகாரம் குறித்து அவர் கூறும்போது, “கூட்டு நாடாளுமன்றக் குழு என்ற பெயரில் காங்கிரஸை தப்பிக்க விட மாட்டோம். இது குறித்து நாடாளுமன்றத்தில் முழு விவாதம் புரிய பாஜக தயாராகவே உள்ளது” என்றார் ராம் மாதவ்