Published : 31 Dec 2018 02:14 PM
Last Updated : 31 Dec 2018 02:14 PM

பருவமழை 2018: தமிழகத்துக்கு சாதகமா? பாதகமா? - பாலச்சந்திரன் பேட்டி

2018 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் போனது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நுங்கம்பாக்கத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், "2018 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான தென்மேற்குப் பருவமழையின் அளவு 28 செ.மீ.இது இயல்பைவிட 12 சதவீதம் குறைவு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முக்கிய மழைக்காலமான வடகிழக்குப் பருவமழையை பொறுத்தவரை பதிவான மழையின் அளவு 34 செ.மீ.இது இயல்பை விட 24% குறைவு.

2018 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை 4 மாவட்டங்களில் இயல்பைவிட 50 சதவீதத்திற்கும் குறைவான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 59% இயல்பைவிட குறைவான மழை பெய்துள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பைவிட 50 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்துள்ளது. 5 மாவட்டங்களில் 40-50 சதவீதத்திற்கும் குறைவாகவும் 5 மாவட்டங்களில் 30-40 சதவீதத்திற்கு குறைவாகவும், 4 மாவட்டங்களில் 20-30 சதவீதத்திற்கு குறைவாகவும் 15 மாவட்டங்களில் 1-19 சதவீதத்திற்கு குறைவாகவும் மழை பெய்துள்ளது. ஒரேயொரு மாவட்டமாக திருநெல்வேலியில் இயல்பைவிட 11% அதிகமாக மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை இயல்பைவிட 24% குறைவு. இது நீண்டகால வானிலை அறிவிக்கையில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை.

பருவமழையைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்கள் அதனை நிர்ணயம் செய்கின்றன. அடிப்படையான வானிலை அமைப்பு மற்றொன்று நகர்ந்து செல்லக்கூடிய வானிலை நிகழ்வுகள். நீண்ட கால வானிலை நிகழ்வுகளை அடிப்படை வானிலை அமைப்பு பெரும்பாலும் நிர்ணயம் செய்யும். எல்நினோ, இந்திய கடல் இருமுனை நிகழ்வுகள் வடகிழக்கு பருவமழையில் தாக்கம் செலுத்தக்கூடிய நிகழ்வுகளைச் சார்ந்ததாக இருக்கும்.

குறுகிய காலத்தில் நிகழக்கூடிய நகர்ந்து செல்லக்கூடிய வானிலை நிகழ்வுகள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள், காற்றழுத்த தாழ்வு நிலைகள், காற்றழுத்த தாழ்வு பகுதிகள், புயல்கள் போன்றவை நீண்டகால வானிலை அறிக்கையில் எதிர்பார்க்க இயலாது.

2018 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில் எல்நினோ உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும், சாதகமான இந்திய கடல் இருமுனை நிகழ்வுகள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எல்நினோ நிகழ்வது தாமதமாகியுள்ளது. நகர்ந்து செல்லக்கூடிய நிகழ்வுகளைப் பொறுத்தவரை செப்டம்பர் மாதம் வரை வலுவாக இருந்தது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வலு குறைந்துவிட்டது. இரண்டுமே குறைந்ததால் அடிப்படை வானிலை நிகழ்வுகள் சாதகாமாக இல்லாமல் போனது.

நகர்ந்து செல்லும் வானிலை நிகழ்வுகளைப் பொறுத்தவரையில் 'கஜா' புயலைத் தவிர்த்து மற்ற மூன்று புயல்கள் 'டிட்லி', 'லூபன்', 'பெய்ட்டி' ஆகிய புயல்கள் தமிழகத்திலிருந்து சாதகமாக இல்லாத தூரத்தில் நகர்ந்து சென்ற காரணத்தினால் காற்றில் ஈரப்பதம் வெகுவாகக் குறைந்து போனது.

மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின் வட பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி மேற்கில் நகர்ந்து செல்லாத நிலையில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலும் மழை குறைந்த நிலை காணப்பட்டது.

அடுத்து நகரும் நிலை நிகழ்வுகளுக்கு சாதகமான நிகழ்வு எந்த நிலையில் இருக்கிறது, அதன் வலிமை ஆகிய இரண்டு நிலையைப் பொறுத்து வடகிழக்குப் பருவமழை சாதகமாக அமையும். இது 2, 3, 4 என்ற நிலைகளில் 36 தினங்கள் இருந்தது. ஒன்றாம் நிலை வலுவைப் பொறுத்தவரையில் 34 தினங்கள் இருந்தது. இரண்டாம் நிலை வலு 8 தினங்கள் இருந்தது. அதிக மழை பெய்த 2015 ஆம் ஆண்டில் இது 55 தினங்கள் இருந்தது. இரண்டாம் நிலை வலு 18 தினங்கள் இருந்தது.

சுருக்கமாக, 2018 ஆம் ஆண்டில் எல்நினோ உருவாகாமல் தாமதமானது. இந்திய கடல் இருமுனை நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க வலுவோடு நிகழவில்லை. நகரும் நிலை நிகழ்வுகள் வலு குறைந்த நாட்கள் குறைவாக இருந்தது. நகர்ந்து செல்லக்கூடிய நிகழ்வுகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், வடகிழக்குப் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் போனது" என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x