

சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில், திமுக தலைவர் கருணாநிதிக்கு இளங்கோ விருது வழங்கப்பட்டது. விருதுடன் பூம்புகார் சிற்பி என்ற பட்டமும், ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டது.
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனின் 85 வயது நிறைவையொட்டி, சிலப்பதிகாரப் பெருவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு, சிலப்பதிகார அறக்கட்டளை சார்பில் இளங்கோ விருதை, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் வழங்கினார். விருதுடன் பொன்னாடை போர்த்தப்பட்டு, கருணாநிதிக்கு பூம்புகார் சிற்பி என்ற பட்டமும், ஒரு லட்ச ரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டது.
விருதை பெற்றுக்கொண்ட கருணாநிதி பேசியதாவது:
சிலப்பதிகார கழகத்தை தமிழகம் முழுவதும் உருவாக்க வேண்டும். அதன் மூலம் சிலப்பதிகாரத்தை பரப்ப வேண்டும் என்று செல்லப்பன் விரும்புகிறார். அவர் கூறியது போல், தமிழ் கலை இலக்கிய வளர்ச்சி பணிகளுக்கு அனைவரும் உதவ வேண்டும், பாடு பட வேண்டும். அனைவரும் இலக் கியம் பரவ, பாடுபட வேண்டும். அது தமிழ் இலக்கியமாக மலர வேண்டும். அதன்வழியே தமிழன் பகுத்தறிவு, மறுமலர்ச்சி பெற வேண்டுமென கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
கருணாநிதியைப் பாராட்டி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, கவிஞர் வைரமுத்து, பேராசிரியர்கள் கா.செல்லப்பன், சாரதா நம்பி ஆரூரன் ஆகியோர் உரையாற்றினர்.
முன்னதாக, காலை 9 மணி முதல் சிலம்பொலி செல்லப்பனின் 85ம் ஆண்டு வயது நிறைவையொட்டி, கருத்தரங்கம், கவியரங்கம், சிலப்பதிகார நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நூல் வெளியீடு
`சிலம்பொலி 85' புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டார். நிறைவாக சிலம்பொலி செல்லப்பன் ஏற்புரை நிகழ்த்தினார்.