

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தழுதாளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1ம் தேதி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை மாணவிகளுக்கு வழங்கினார்.
இந்த சைக்கிள்களில் மாட்டப்பட்டிருந்த முன்புற கூடையில் ஒரு படமும் அதில் மாணவி படிப்பது போன்ற பிம்பமும் இருந்தது. இதில் கன்னட மொழி வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு வழங்கும் இலவச சைக்கிள்களில் ஏன் கர்நாடக அரசு முத்திரை வந்தது, எப்படி? என்று மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பமடைந்தனர். ஒரு சிலருக்கு அதிர்ச்சியும் ஏற்பட்டது.
அதாவது, தரமற்ற சைக்கிள்களை இங்கு இலவசம் எனத் தள்ளிவிடுகிறதா அரசு என்று பெற்றோர்களுக்குச் சந்தேகம் வந்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் விசாரணைக்கு உத்தரவிட்டார். கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 59,000த்துக்கும் அதிகமான இலவச சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் சுமார் 39,000த்துக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் வழங்கப்பட்டு விட்டன. தழுதாளி அரசு மேநிலைப்பள்ளியில் வழங்கிய 600 சைக்கிள்களில் 10 சைக்கிள்களில் மட்டும் தவறாக கர்நாடக அரசு முத்திரை கொண்ட கூடை பொருத்தப்பட்டது. இது பிறகு கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு விட்டது, மற்றபடி கூடையை தவிர சைக்கிளின் மற்ற உதிரிபாகங்கள் அனைத்தும் தரமாக தமிழகத்திற்காக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டதாகும். தற்போது அந்த சைக்கிள்களில் தமிழக அரசின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.