

காற்றழுத்த தாழ்வு சுழற்சி நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த சுழற்சி தற்போது, தற்போது இலங்கையின் கொழும்பு அருகே நிலை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நிலவி வந்த மற்ற இரண்டு காற்றழுத்த சுழற்சிகள் மறைந்து விட்டன.
இதனால் வட தமிழகத்தில் நேற்று பெய்த மழை இன்று குறைந்துள்ளது. இந்த இரு சுழற்சிகள் தான் வட தமிழகம் வரை காற்றை ஈர்த்து வழங்கி வந்தது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்துக்கு மழை குறைந்துள்ளது.
அதேசமயம், தெற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை 6-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 8-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது. எனினும் இது மிக பலத்த மழையாக இருக்காது. வலுவிழந்த மழையாக மட்டுமே பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் சற்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 12-ம் தேதியையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது சற்று வலிமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்போக்கை பொறுத்து டிசம்பர் 12-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.