கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ

கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ
Updated on
1 min read

கிராம நிர்வாக அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் பணிபுரியும் ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்வர் 28 ஆம் தேதி முதல் போராடி வருகின்றனர். மூன்று கட்டங்களாக அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்திலும் இறங்கி உள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலர்களின் பணி பொதுமக்களோடு நேரடித் தொடர்புள்ள இன்றியமையாத பணியாகும். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிகச் சாதாரணமானவை. அரசு நிர்வாகத்துறை முற்றிலும் கணினி மயமாகி வரும் சூழலில் கிராம நிர்வாக அலுவலர்கள் கணினி மற்றும் இணையதள வசதி அரசின் சார்பில், வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமானது. ஏனெனில் கிராம நிர்வாக அலுவலர்களால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தும் இணையதளம் மூலம் மட்டுமே அளிக்கப்படுகிறது.

எனவே, அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவது அரசின் பொறுப்பாகும். மேலும், கிராம நிர்வாக அலுவலர்களாக 50 விழுக்காடு பெண்கள் பணிபுரிவதால், அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் கோரி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர்களின் அலுவலகங்களில் மின்வசதி, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என்ற கோரிக்கையும் அரசால் நிறைவேற்ற முடியாதது அல்ல.

தற்போது ஒன்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை கூடுதலாக கவனிக்க வேண்டி இருப்பதால், கிராம நிர்வாக அலுவர்களின் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்.

எனவே தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, கிராம நிர்வாக அலுவலர்களின் கோரிக்கைளை நிறைவேற்ற முன்வர வேண்டும். பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்" என வைகோ வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in