Published : 05 Dec 2018 02:23 PM
Last Updated : 05 Dec 2018 02:23 PM

கருணாநிதி மறைவுக்கு இரங்கற்பா எழுதி நடவடிக்கைக்கு ஆளான பெண் காவலர்: ஸ்டாலின் நேரில் சந்திப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கற்பா எழுதியதால் நடவடிக்கைக்கு உள்ளான  பெண் தலைமைக் காவலர் இல்லத்துக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

திருச்சி மாநகரம் பொன்மலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் முகநூல் பிரிவில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவர் செல்வராணி ராமச்சந்திரன். இவர் திமுக தலைவர் கருணாநிதிமேல் மிகுந்த பற்று கொண்டவர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் கருணாநிதி உடல்நலக் குறைவால் காலமானார். அப்போது பணியிலிருந்த செல்வராணி, கருணாநிதி குறித்து உருக்கமுடன் இரங்கற்பா எழுதி அதை கவிதை வடிவில் வாட்ஸ் அப்பில் வெளியிட்டார். அவரது இரங்கற்பா கவிதை குறித்து ஆகஸ்டு 12 மற்றும் 13 தேதிகளில் ஊடகங்களில் செய்தி வெளியானது.வலைதளங்களிலும் வைரலானது.

இதுகுறித்து கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி திருச்சி காவல்துறை அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில், ''தாங்கள் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டே இதுபோன்று கவிதை இரங்கற்பா எழுதி காவல் பணியின் தன்மையை மீறி பதிவு செய்துள்ளீர்கள்.

இது நீங்கள் பணியின்மீது கொண்டுள்ள பற்றற்ற தன்மையையும், அலட்சியப்போக்கையும் காட்டுகிறது. எனவே இதுகுறித்து மூன்று நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 அதன்பின்னர் செல்வராணி விளக்கம் அளித்தார். ஆனால் அவரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவு வந்தது.

இதையடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். நேற்று திருச்சி அனைத்துக் கட்சிகளின் ஆர்ப்பாட்டத்துக்கு வந்த திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து செல்வராணியின் இல்லத்திற்கு ஸ்டாலின் சென்றார். அவரை செல்வராணியும், அவரது கணவரும் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

''நான் ஏன் காவல்துறையில் இருக்கவேண்டும், நான் கிராமத்தில் பிறந்தவள். எனக்கு அனைவரும் சித்தப்பா, பெரியப்பாதான். அந்த வகையில் கருணாநிதியும் எனக்கு தகப்பன் தான். எப்படி தகப்பன் என்று கேட்டு என் விளக்கத்தைக் கேட்காமல் இடமாற்றம் செய்தார்கள்.

என் தகப்பன் இறந்து கிடக்கிறார். அவருக்காக ஒரு கண்ணீர் அஞ்சலி இரங்கற்பா கூட எழுதக்கூடாது என்றால் எனக்கு அந்த வேலையே தேவையிலை என்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன். என் தகப்பனுக்காக வேலையை விட்டுள்ளேன். இதற்காக பிச்சை எடுக்கக்கூடத் தயார்'' என செல்வராணி ஸ்டாலின் முன் ஆவேசமாக தெரிவித்தார்.

பின்னர் இரங்கற்பாவை ஸ்டாலின் முன் படித்துக் காட்டினார். அவர்களிடம் இருந்து  விடைபெற்ற ஸ்டாலின், ''சென்னை வந்தால் என்னை சந்தியுங்கள். என்ன பிரச்சினை வந்தாலும் ஒரு சகோதரனாக என்னை அணுகுங்கள்'' என்று செல்வராணியிடம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x