Published : 08 Dec 2018 10:43 am

Updated : 08 Dec 2018 10:43 am

 

Published : 08 Dec 2018 10:43 AM
Last Updated : 08 Dec 2018 10:43 AM

ஊழல் துணைவேந்தரைக் காப்பாற்ற சதி; அமைச்சருடன் ரகசிய உடன்படிக்கை: ராமதாஸ் குற்றச்சாட்டு

பேராசிரியர் பணிக்கு லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரைக் காப்பாற்ற சதி நடப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும், களவுமாக அப்பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட வழக்கில், 10 மாதங்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. உலக அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய இந்த வழக்கில் நீதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.


பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகை செய்ய முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலான வழக்கு அல்ல. பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்ட சுரேஷ் என்பவரிடமிருந்து லஞ்சப் பணத்தை துணைவேந்தர் கணபதி அவரது இல்லத்தில் வைத்து வாங்கிய போது தான் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

அதுமட்டுமின்றி, பணி நியமன ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நோக்குடன் துணைவேந்தரும், அவரது மனைவியும் கழிப்பறையில் வீசிய ஆவணங்களும் கண்டுபிடித்து எடுக்கப்பட்டுள்ளன. உதவிப் பேராசிரியர் பணிக்கு லஞ்சம் தருவது பற்றி சிலரிடம் துணைவேந்தர் தொலைபேசியில் நடத்திய உரையாடலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

துணைவேந்தர் உள்ளிட்ட இவ்வழக்கின் எதிரிகளை விசாரித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன. இத்தனை ஆதாரங்கள் இருந்தும் குற்றப்பத்திரிகை தாமதமாவது பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளது. வழக்கமாக லஞ்சம் வாங்கியவர்களை காவல்துறையின் லஞ்சத் தடுப்புப் பிரிவு கையும், களவுமாக பிடிக்கும் போது, அரசுத் தரப்பு சாட்சி ஒருவரும் உடனிருப்பார். அதன்பின் சந்தர்ப்ப சாட்சியங்களைச் சேகரிக்க வேண்டியது தான் அவர்களின் பணியாகும்.

இதையும் ஒரு சில நாட்களிலேயே லஞ்சத் தடுப்புப் பிரிவு சேகரித்து விடும் என்பதால் இதுபோன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகையை மிகவும் விரைவாக தாக்கல் செய்து விட முடியும். ஆனால், துணைவேந்தர் கைது செய்யப்பட்டு 310 நாட்கள் ஆகியும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிமினல் வழக்குகளைப் போலவே லஞ்ச வழக்குகளிலும் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு பெரும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும். இவ்வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைக் காரணம் காட்டி தமக்கு மீண்டும் துணைவேந்தர் பதவி வழங்க வேண்டும் என்று கோருவதற்குக் கூட கணபதிக்கு உரிமை உள்ளது.

இதையெல்லாம் அறிந்திருந்தும் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய லஞ்சத் தடுப்புப் பிரிவினர் தாமதம் செய்கிறார்கள் என்றால் அது இயல்பாக நடப்பதாகத் தெரியவில்லை. இதற்காக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்களும் ஏற்கும்படியாக இல்லை.

முன்னாள் துணைவேந்தர் கணபதியின் குரல் பதிவு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது; ஆளுநர் மாளிகையில் இருந்து சில ஆவணங்களைப் பெறக் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று லஞ்சத் தடுப்புப் பிரிவு விளக்கம் அளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியுள்ளது. குரல் பதிவுகளை அதிகபட்சம் 10 நாட்களில் ஆய்வு செய்து விட முடியும்; அதனால் இக்காரணத்தை ஏற்க முடியாது.

அதேபோல், தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பல்கலைக்கழக நிர்வாகங்கள் தூய்மைப்படுத்தப் பட்டிருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழக ஆளுநர், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை இன்னும் வழங்கவில்லை என்பது உண்மையென்றால் அது பெரும் குற்றம்.

லஞ்சம் வாங்கிய போது கையும், களவுமாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கணபதி அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளைக் கூறியுள்ளார். துணைவேந்தர் பதவிக்காக யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது, பணி நியமனங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த பணத்தில் இப்போதுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு பங்கு தரப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை வெளியிடப்போவதாக கணபதி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து அவருக்கும், அமைச்சர் தரப்புக்கும் செய்து கொள்ளப்பட்ட எழுதப்படாத சமரச உடன்பாட்டின்படி தான் கணபதி மீதான வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வழக்கில் ஊழல் குற்றவாளி கணபதி விடுதலை செய்யப்படுவது உறுதி என்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

பணி நியமனத்திற்காக லஞ்சம் வாங்கி பிடிபட்ட கணபதி குற்றமற்றவர் என்று கூறி விடுவிக்கப்பட்டால் அந்த நாள் தான் நீதியும், நேர்மையும் படுகொலை செய்யப்பட்ட நாளாக இருக்கும். அதன்பின் ஊழலைப் பற்றி பேசுவதே அர்த்தமற்றதாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது.

எனவே, கோவை பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கணபதி உள்ளிட்டோருக்கு தண்டனைப் பெற்றுத் தர லஞ்சத் தடுப்புப்பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தவறவிடாதீர்!


    பாமகராமதாஸ்லஞ்சம்கோவை பல்கலைக்கழகம்துணைவேந்தர் கணபதிPMKRamadossCorruptionCovai universityVC ganapathy

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author