Published : 18 Dec 2018 05:54 PM
Last Updated : 18 Dec 2018 05:54 PM

கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு மாநகராட்சியிடம் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்,  அலிம்கோ நிறுவனத்துடன் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயபுரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், "மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்புக்கு பெரிய பெரிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு எங்கிருந்து மின்சாரம் எடுத்தனர்? எல்லாம் சென்னை மாநகராட்சி மின்சாரத்திடம் இருந்து எடுத்துள்ளனர். அவ்வாறு எடுப்பதற்கு அதிகாரமே இல்லை. மின்சாரத்தை திருடியுள்ளனர். அதற்கான அனைத்து ஆதாரங்களையும் எடுத்திருக்கிறோம். சென்னை மாநகராட்சியின் மின்கம்பம் மூலமே மின்சாரம் எடுத்து கட்-அவுட், மின்விளக்குகளுக்கு பயன்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசுடன் இணக்கமாக மாநிலத்தின் உரிமைகளுக்காக தமிழக அரசு குரல் கொடுத்து வருகிறது. ஆனால், கருணாநிதி சிலை திறப்புக்காக வந்த தலைவர்கள் தமிழக பிரச்சினைகள் குறித்து பேசினார்களா? மேகேதாட்டு குறித்தோ, 'கஜா' புயலுக்கு மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றோ அவர்கள் பேசவில்லை" என கூறினார்.

இதையடுத்து, ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "சம்மன் அனுப்பியவர்கள் அனைவரும் குற்றவாளி அல்ல. அவர்கள் அனைவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை விசாரணை ஆணையத்திற்கு தெரிவிப்பர். வாக்குமூலம் பெற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தண்டனை பெற்றால் தான் குற்றவாளி" என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x