எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்: ஆய்வாளர் இடமாற்றம்

எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்: ஆய்வாளர் இடமாற்றம்
Updated on
2 min read

சென்னை பாரிமுனை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு சம்பந்தமாக சட்டவிரோதமாக 3 நாட்கள் அடைத்து வைத்து விசாரிக்கப்பட்ட இளைஞர் மரணமடைந்தார். இதையடுத்து ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எஸ்பிளனேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மண்ணடி, முத்துமாரி செட்டி தெருவில் வசித்து வருபவர் சபீர் பட்னவாலா (52). இவர் கடந்த 15-ம் தேதி அன்று தனது குடும்பத்தாருடன் உறவினரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோயம்புத்தூர் சென்றார்.

திருமண நிக்ழவு முடிந்த பின்னர் கடந்த 2 நாட்கள் கழித்து 17-ம் தேதி இரவு 11.30 மணியளவில் வீட்டிற்குத் திரும்பினார். வீட்டுக்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் வாசல் கதவு பூட்டின் ஸ்க்ரூ அகற்றப்பட்டிருந்தது. சபீர் வீட்டில் இல்லாததைப் பயன்படுத்தி ஸ்க்ரூ டிரைவரால் கதவை அகற்றிய மர்ம நபர்கள் உள்ளே சென்று அலமாரியில் ( கப்போர்டில் ) இருந்த சுமார் 32 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மறுநாள் காலை 10 மணி அளவில் சபீர் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் 454 , 380-ன் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 20-ம் தேதி அன்று 1.15 மணியளவில் மண்ணடி ஜீன்ஸ் தெரு பிளாட்பாரத்தில் வசிக்கும் விக்னேஷ் (23), கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகரில் வசிக்கும் மணிவண்ணன் என்பவரின் மகன் ஜெயக்குமார் (22),  செம்புதாஸ் தெரு , பிளாட்பாரத்தில் வசிக்கும்  அஜித் (19)  ஆகியோரை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர்.

விசாரணையில் இருந்தபோது மேற்கண்ட விசாரணைக் கைதிகளில் ஒருவரான ஜெயக்குமார் என்பவர் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்தார். இதைக் கண்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  குணசேகரன் ஜெயக்குமாரை  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால்,  அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக அவசரப் பிரிவு மருத்துவ அதிகாரி செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

பின்னர் ஜெயக்குமார் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பிணவறைக்கு அனுப்பப்பட்டது. உயிரிழந்த ஜெயக்குமார் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அடிக்கடி வலிப்பு வரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த ஜெயக்குமார் மீது  காவல் நிலையத்தில் இதற்கு முன்பு எந்த வழக்கும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.  மேலும் அவர்களிடமிருந்து வழக்கு சம்பந்தப்பட்ட நகையோ , பணமோ கைப்பற்றவில்லை என்றும் தெரியவந்துள்ளது. 

ஜெயக்குமாரை 17-ம் தேதி மதியம் அழைத்துச் சென்ற போலீஸார் 3 நாட்களாக சட்டவிரோதமாக அடைத்து வைத்திருந்ததாக அவரது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது மகனை மறுநாள் பார்த்தபோது கையெல்லாம் வீங்கிய நிலையில், ''என்னை குற்றத்தை ஒப்புக்கொள்ளச்சொல்லி அடிக்கிறார்கள் அம்மா, எனக்கு எதுவுமே தெரியாது'' என தன் மகன் கதறியதாக ஜெயக்குமாரின் தாயார் தெரிவித்தார்.

நேற்றிரவு திடீரென போலீஸார் தனது கணவருக்குப் போன் செய்து உங்கள் மகனுக்கு வலிப்பு நோய் உண்டா எனக்கேட்டதாகவும், பின்னர் சிறிது நேரம் கழித்து உங்கள் மகன் உயிரிழந்துவிட்டார் எனக்கூறியதாகவும் ஜெயக்குமாரின் தாயார் கதறி அழுதபடி தெரிவித்தார்.

உயிரிழந்த இளைஞர் ஜெயக்குமார் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். லாக்கப் மரணம் காரணமாக குற்றப்பிரிவு ஆய்வாளர் குணசேகரன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விசாரணை நடக்கிறது என்றும் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை விசாரணைக்குப் பின் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார். இதனிடையே லாக்கப் மரணம் என்பதால் மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு ஜார்ஜ் டவுன் குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் ஆனந்த் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் விசாரணை நடத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in