

மதிமுக நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் டீக்கடை ஒன்றை அடித்து நொறுக்கி ஊழியர்களை தாக்கினார் ஒருவர். அதை படமெடுத்த ஆங்கில தொலைக்காட்சி ஊழியரை முகத்தில் தாக்கி ரத்தக்காயத்தை ஏற்படுத்தியதை அடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர்.
ஏழுபேர் விடுதலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஆளுநர் மெத்தனமாக இருப்பதை கண்டித்து மதிமுக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. மதிமுகவுடன் தோழமைக்கட்சிகளான திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்துக்கொண்டன.
போராட்டத்தை தமிழ், ஆங்கில ஊடகங்கள் ஒளிபரப்பின. அப்போது அங்குள்ள டீக்கடை ஒன்றில் ஒரு நபர் உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி பாட்டில்களை தூக்கி எரிந்து உடைத்து கலாட்டா செய்துக்கொண்டிருந்தார். ஓட்டல் ஊழியர்களையும் அவர் தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பாட்டிலை தூக்கி போட்டு உடைத்து ஊழியர்களை அந்த நபர் மிரட்டிக்கொண்டிருப்பதை சுற்றி நின்று அனைவரும் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தனர். போலீஸாரும் வரவில்லை. இந்நிலையில் அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த செய்தியாளர்கள் பரபரப்பாக இருக்கும் அப்பகுதிக்கு என்னவென்று பார்க்கச் சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது ஆங்கில தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் ப்ரமோத் என்பவர் டீக்கடை ஊழியர்களை தாக்கி மிரட்டிக்கொண்டிருந்த அந்த நபரை தனது செல்போனில் படம் பிடித்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் ப்ரமோத்தின் முகத்தில் ஓங்கி குத்தினார். இதில் ப்ரமோத்துக்கு முகத்தில் கண்ணுக்கு கீழ் கிழிந்து காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. செல்போன் கீழே விழுந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற செய்தியாளர்கள் அவரிடம் எப்படி நீங்கள் தாக்கலாம் என்று கேட்டபோது அனைவரையும் கொன்று விடுவேன் என மிரட்டிய அவர் அங்கிருந்த பெரிய எண்ணெய் கடாயை தூக்கி செய்தியாளர்களை தாக்க முயன்றார். அப்போது அங்கு வந்த கிண்டி போலீஸார் அவரை மடக்கி பிடித்தனர்.
ஆனாலும் அவர் போலீஸார் முன்னிலையில் நான் யார் தெரியுமா அத்தனை பேரையும் காலிபண்ணிவிடுவேன் என மிரட்டியுள்ளார். போலீஸார் அவரை மடக்கி வேனில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். முகத்தில் காயம்பட்ட ப்ரமோத் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றார். ப்ரமோத்தை தாக்கியவர் சைதாப்பேட்டைப்பகுதி திமுக பிரமுகர் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ப்ரமோத்தை திமுக மாவட்டச்செயலாளர் மா.சுப்ரமணியம் சென்று பார்த்து நலம் விசாரித்தார். கைது செய்யப்பட்ட நபர் பெயர் சுரேஷ்பாபு என்று தெரியவந்துள்ளது. அவர் திமுக பிரமுகர் இல்லை என திமுக தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அவர்மீது கிண்டி காவல் நிலைய போலீஸார் 294 (பி) (பொது இடத்தில் அவதூறாக பேசுவது) 341 (பொது இடத்தில் தகராறு செய்து ஒழுங்கீனமாக நடப்பது) 307 (கொலை முயற்சி), 506(2) (ஆயுதத்துடன் கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாக்கப்பட்ட ப்ரமோத் சமீத்தில் பரங்கிமலையில் நடந்த ரயில் விபத்தில் சுவற்றில் மோதி பலர் உயிரிழந்தபோது அங்கு செய்தி சேகரிக்கச் சென்று உதவியும் புரிந்து மீட்புப்பணியில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் குறித்து இதேபோன்று தனது செல்போனில் படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். அதைப்பார்த்த ரயில்வே நிர்வாகம் அந்த இரண்டு இளைஞர்களுக்கு ரிவார்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.