33 பட்ட மேற்படிப்புக்கள் தகுதியற்றது: தமிழக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

33 பட்ட மேற்படிப்புக்கள் தகுதியற்றது: தமிழக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
Updated on
1 min read

33 பட்ட மேற்படிப்புக்களை தகுதியற்றது என்ற தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தமிழகத்தில் எட்டு பல்கலைக்கழகங்களில் 33 படிப்புக்கள் அரசு வேலைக்கு தகுதியற்றவை என தடாலடியாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்காக சொல்லப்படும் காரணம் எவ்விதத்திலும் பொருத்தமற்றது.  இந்த படிப்புக்களை படித்து முடித்த பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகளும் தற்போது பயின்று வரும் 25 ஆயிரம் மாணவி, மாணவிகளும் கடுமையான பாதிப்புக்குள்ளாகி அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

இந்தப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்களை பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே வகுத்துள்ள நிலையில், இந்தப் பாடத்திட்டங்கள் தகுதியற்றவை என்ற தமிழக அரசின் அறிவிப்பு  அநீதியானது. மாணவர்களின் நலனுக்கு விரோதமான இந்த நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது’’ எனக் கூறியுள்ளார்.

இதுபோலவே, இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே மத்திய அரசுப்பணி என்ற அறிவிப்புக்கும் பாலகிருஷ்ணன் கண்டனம்  தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் ‘‘கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதுநிலை, இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணித் தேர்வில் இந்தி மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் இந்தி தெரியாத தமிழ்நாட்டு மாணவர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவது தடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று, மத்திய அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம், சுருக்கெழுத்தாளர் பணிக்கான தேர்விலும் இந்தி கட்டாயம் என அறிவித்துள்ளது. சுருக்கெழுத்தாளர் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தால், பணி நிரந்தரம் ஆக வேண்டுமெனில் இந்தி சுருக்கெழுத்து படித்து தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இந்தி மொழி படித்தவர்களுக்கே மத்திய அரசுப்பணிகள் என்கிற ஜனநாயக விரோத நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. மத்திய அரசின் இந்த இந்தி திணிப்பு நடவடிக்கையை மாநில அரசும் வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்தி பேசாத மக்கள் மீது அநீதியாக இந்தியைத் திணிக்கும் இத்தகைய முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. உடனடியாக இவற்றை கைவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது’’ எனக் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in