

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆம்னி பஸ்களில் அதிகக் கட்டணம் வசூலிப்பது, பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விதிமீறல்களைக் கண்காணிக்கச் சிறப்புக் குழுக்களை அமைக் கவுள்ளதாகப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னை இருந்து மட்டும் 800 பஸ்கள் திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும் பெங்களூர், ஐதராபாத் போன்ற வெளிமாநிலங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிகளவில் ஆம்னி பஸ்கள் இயக்கப்படும்.
இந்நிலையில் ஏசி ஆம்னி பஸ்களுக்கு 30 சதவீதமும், சொகுசு ஆம்னி பஸ்களுக்கு 20 சதவீதமும் கட்டணத்தை உயர்த்தி பயணிகளிடம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. தொடர் டீசல் விலை உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டண உயர்வுக்குக் காரணங்களாகச் சுட்டிக்காட்டுகின்றனர். முன்பெல் லாம் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது இப்போதே கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘ஆம்னி பஸ்கள் தற்போதே கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதாக பொது மக்கள் தரப்பில் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படவுள்ளது. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு குழுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவுள்ளோம். விரைவில் நடக்கவுள்ள போக்குவரத்து அதிகாரிகளின் கூட்டத்துக்குப் பின்னர், இந்த குழுக்களின் விவரம் அறிவிக்கப்படும். மேலும், மக்கள் புகார் அளிக்கும் வகையில் தொலைப்பேசி எண்களும் வெளியிடுவோம்’என்றனர்.