

குருவியாக செயல்பட்டு சட்ட விரோதமாக பொருட்களை கடத்தும் ‘குருவி’கள் எனப்படும் இடைத்தரகர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவல்லிக்கேணி, பாரதி சாலையில் வசித்து வருபவர் ஜாபர் சாதிக் (27). இவர் நேற்று முன்தினம் இரவு நந்தனம் வழியாக மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நண்பர் தமீம் அன்சாரியுடன் பைக்கில் சென்று கொண் டிருந்தார். இரவு 9.30 மணிக்கு நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை அருகே செல்லும்போது அங்கு 2 பைக்குகளில் வந்த ஒரு கும்பல் மிளகாய் பொடியை ஜாபர் சாதிக், தமீம் அன்சாரி முகத்தில் வீசினர்.
இதில், நிலைகுலைந்த 2 பேரும் கீழே சரிந்து விழுந்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் இரும்பு ராடால் தாக்கி அவர்களிடமிருந்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை பறித்துச் சென்றுள்ளனர். அதிர்ச்சி அடைந்த ஜாபர் சாதிக் இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது நண்பர் தமீம் அன்சாரி இருவரும் ‘குருவி’யாக செயல்பட்டு வந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக் கின்றனர். இவர்களிடம் ரூ.13 லட்சத்துக்கான கணக்கு இல்லை. அவர்களைத் தங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்து போலீஸார் விசாரிக் கின்றனர். இதற்கிடையே மிளகாய்பொடி தூவி பணத்தை பறித்துச் சென்ற 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குருவிகள்
இதற்கிடையில், ‘குருவி’ என்று அழைக் கப்படுபவர்கள் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து சென்னை யில் உள்ள தனிப்படை போலீஸார் கூறும் போது, "கணக்கில் காட்டப்படாத லட்சக் கணக்கான பணத்தை (ஹவாலா) தமிழகத் திலிருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக் குக் கொண்டு சென்று, அங்கிருந்து தங்க கட்டிகளையோ, எலெக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்களையோ சட்ட விரோதமாக மீண்டும் கொண்டுவரும் இடைத்தரகர்களாக செயல்படு பவர்கள் ‘குருவி’ என்று அழைக்கப்படுகின்றனர்.
வேலையற்ற இளைஞர்கள்
படித்த வேலையற்ற இளைஞர்களை, பணம் படைத்த தொழில் அதிபர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். வேலையின்றி தவிக்கும் இளைஞர்கள், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க நினைக்கும் இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டு குருவியாக பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களுக்கான விசா, விமான கட்டணம், தங்கும் செலவு உட்பட அனைத்தையும் சம்பந்தப்பட்ட தொழில் அதிபர்களே ஏற்றுக் கொள்கின்றனர்.
ரகசிய மொழி
குருவியாக அனுப்பப்படும் இடைத் தரகர்கள் தங்களுக்குள் ரகசிய சைகை, மொழி, குறியீடு உள்ளிட்டவற்றை எதிர் தரப்பினரி டையே பயன்படுத்துவார்கள். பணத்துக்கு தங்கம், பணத்துக்கு எலெக்ட்ரானிக் பொருள், பணத்துக்கு போதைப் பொருள் என கைமாறும். இதற்கு குருவியாக செயல்படுபவர்களுக்கு 30 சதவீதம் வரை கமிஷனாகக் கொடுக்கப் படுகிறது. பணம் கொடுப்பவருக்கும் பணத் துக்குப் பொருள் கொடுப்பவருக்கும் எந்த அறிமுகமும் இருக்காது. ஒருவரை ஒருவர் யார் என்றே தெரியாது. பொருளை கொடுப்பவர் ‘கொக்கு’ என அழைக்கப்படுகிறார்.
ஒரே நபர் தொடர்ந்து குருவியாக பயன் படுத்தப்படுவது இல்லை. மாற்று நபர்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றனர். இவர்களை இயக்கும் தொழில் அதிபர்கள் பெரும்பாலும் வெளியே தெரிவது கிடையாது. சம்பந்தப்பட்ட குருவிகள் கைது செய்யப்பட்டாலும் அவர்களை மீண்டும் வெளியே கொண்டு வரும் அத்தனை பொறுப்புகளையும் சம்பந்தப்பட்ட தொழில் அதிபரே ஏற்றுக் கொள்கிறார்.
இதுபோன்ற செயல்பாடுகளால் குருவியாக செயல்பட பல இளைஞர்கள் முன் வருகின்ற னர். இப்படி செயல்படுபவர்களை போலீஸார் உன்னிப்பாக கண்காணிக்கின்றனர்.
அவர்களை ஹவாலா பணத்துடனோ அல்லது அதைக் கொடுத்து வெளிநாட்டி லிருந்து தங்கமாகவோ மாற்றி கொண்டு வரும்போது சுங்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் விமான நிலையத்தில் போலீஸார் சுற்றி வளைக்கின்றனர்.
இப்படிதான் கடந்த நவம்பர் மாத இறுதியில் சென்னை மயிலாப்பூர் ஹோட்டலில் பதுக்கிய 7 கிலோ தங்கம், 11 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 2 தென் கொரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். குருவியாக செயல்படும் இளைஞர்கள் டிப்டாப் உடையுடனே இருப்பார் கள். அவர்களை அடையாளம் காண்பது கடினம். இருப்பினும் அவர்களை போலீஸார் ‘இன்பார்மர்கள்’ மூலம் சுற்றி வளைக்கின்றனர். குருவிகளிடையே போட்டிக் குழுக்கள் உள்ளன. அதை போலீஸார் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
எனவே, யாரும் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் குருவியாக செயல்பட வேண்டாம். கைது செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.