

சென்னைக்கு 690 கி.மீ.தொலைவில் உள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திர கடற்கரையில் கரையை கடக்கும் எனவும், இதனால் வட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்ததாவது:
“தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைக்கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், தற்பொழுது சென்னைக்கு தென்கிழக்கே 690 கி.மீ.தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது கடந்த 24 மணி நேரத்தில் 260 கி.மீட்டரை கடந்துள்ளது. இதன் வேகம் தற்போது மணிக்கு 11 கி.மீ. ஆகும்.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் இது புயலாக வலுப்பெற்று ஆந்திர கரையின் ஓங்கோல் காக்கிநாடா இடையே டிச.17-ம் தேதி பிற்பகலில் கரையைக்கடக்கும் என எதிர்ப் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக டிச.15,16 ஆகிய தேதிகளில் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைபெய்யும், ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தரைக் காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் டிச. 15,16,17 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையைப் பொருத்தவரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.