

என் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றார்கள், அங்கு பின்னடைவு என்றவுடன் ஆயிரக்கணக்கில் பிரச்சினை கொடுக்கிறார்கள், தனி ஆளாக இருந்து போரிடுகிறேன் என பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்தார்.
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக புகார் அளித்தவர்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த பொன்மாணிக்கவேல் கூறியதாவது:
உங்களுக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார்களே?
இது எதிர்ப்பார்த்ததுதான் என்னைப்போன்ற எளிமையான அதிகாரிக்கு எதிராக புகார் வரத்தான் செய்யும். புகார் அளித்த 21 பேரும் இந்த 400 நாட்களில் ஒரு எப்.ஐ.ஆர் கூட போடவில்லை. இதுவரை அவர்களிடம் ஒப்படைத்த வழக்கை விசாரித்து சார்ஜ்ஷீட் போட்டிருக்கணும் அல்லவா? அவர்கள் செய்யவில்லை. அவர்கள் நல்லவர்கள்தான். அவர்கள் பின்னால் சிலர் இருக்கிறார்கள்.
நீங்கள் அவர்களை மிரட்டுவதாக கூறுகிறார்கள்? ஒரு அதிகாரி 220 நாட்களுக்குமேல் மெடிக்கல் லீவில் இருந்துள்ளதாக புகார் கூறுகிறார்களே?
அவர் ஒரு டெசர்ட்டர், 21 நாள் ஒருவர் வராமல் இருந்தால் ஒருவரை டெசர்ட்டர் என்பார்கள், 21 நாட்களுக்கு மேல் இருந்தால் கன்ஃபர்ம் டெசர்ட்டர் என்பார்கள். நம்பிக்கையின் அடிப்படையில் முக்கியமான வழக்கான பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் வழக்கை கொடுக்கிறோம். அதோடு ஓடினவர் பிறகு வரவே இல்லை.
நாங்கள் இந்த ஸ்ட்ரெந்தை நம்பி வாழவில்லை. மன உளைச்சல் என்று சொல்கிறீர்களே எங்களுக்கு மன உளைச்சலா? மக்களுடைய வரிப்பணம். கைது நடவடிக்கையில் எஸ்.ஐ.வரை எப்.ஐ.ஆர் போட முடியாது. இப்படி ஓடிப்போனவருக்கு டூட்டி போடக்கூடாது. ஆனால் அவரை விஜிலென்ஸில் போடுகிறார்கள்.
இப்போது நான் அரசு ஊழியர் அல்ல உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர். அயல்பணியில் வந்தவர்கள் 208 பேர் அதில் 10 டிஎஸ்பி, அதில் 5 ஏடிஎஸ்பி, 5 டிஎஸ்பி கொடுத்துள்ளார்கள். இதில் யாராவது இந்த ஸ்ட்ரெந்தை பயன்படுத்தி ஒரே ஒரு சிலையைக்கூட பிடிக்கவில்லை. அந்தந்த மாவட்டத்தில் நானாக அந்த மாவட்ட எஸ்பிக்களிடம் கேட்பேன், நானாக செல்வேன் அங்குள்ள சில போலீஸாரை வைத்து பிடிப்பேன்.
இதுபோன்று 47 வழக்குகளை பிடித்துள்ளேன். இவர்களை எல்லாம் எதற்கு வைத்திருந்தேன் தெரியுமா? சிலைகளை மொத்தமாக பிடிக்கும்போது அதை தூக்க நகர்த்த பயன்படுத்துவேன். 300 பேர்களை அவர்களுக்கு உதவியாகத்தான் பயன்படுத்தியுள்ளேன்.
மொத்த வழக்குகளை டிஎஸ்பிக்கள்தான் விசாரிப்பார்கள். நானே இன்வெஸ்டிகேட்டர். நீங்கள் இந்தியாவில் எங்காவது விசாரியுங்கள் ஐஜி ஒரு திருட்டுக்கேசை விசாரிப்பதாக சொல்லுங்கள் உங்களுக்கு ஒருமாத சம்பளத்தை திருப்பி தந்துவிடுகிறேன்.
ஒட்டுமொத்த போலீஸும் உங்களுக்கு எதிராக திரும்பியுள்ளதற்கு யார் காரணம்?
நீங்கள்தான் சார் கண்டுபிடிக்கணும், நீங்கள்தான் வாட்ச்டாக்.
உங்களால் பணிச்சுமை உருவாகியுள்ளதாக கூறியுள்ளனர்?
பணிச்சுமை என்றால் ஒரு எப்.ஐ.ஆராவது போட்டால்தானே வரும்.
நீங்கள் செயல்படவில்லை என்பதுதானே புகாரே?
இதெல்லாம் கேள்வியா? ஏதாவது ஒரு எவிடென்ஸ் காட்டுங்கள். நான் எனக்கு கீழ் உள்ள போலீஸாரிடம் பேசி ஒரு வருடம் ஆச்சு, இன்ஸ்பெக்டர்களிடம் நேரடியாக மீட்டிங் போட்டு மாசக்கணக்கில் ஆகிறது.
பிடிக்கப்பட்ட சிலைகள் தொன்மையானவை இல்லை என்று போலீஸ் அதிகாரிகள் சொல்கிறார்களே?
தொன்மை என்று நிரூபித்தால் இதே டிஜிபிகிட்ட நீங்கள் சொல்லி அவர்களை சஸ்பெண்ட் செய்வீர்களா? இப்படி ஒன்று கூடலாமா? நான் அரசு அதிகாரி இல்லை என்பதால் நீங்கள் அழைத்ததால் பிரஸ்ஸை பார்க்கிறேன். ஒரு சர்வீஸ் மேட்டர் பிரஸ்சுக்கு வெளியே வரலாமா? அது உள்விவகாரம். டிசம்பர் 5-ம் தேதி ரிப்போர்ட் செய்துள்ளனர். அன்றிலிருந்து இன்றுவரை ஒரு 5 பேர் அளவில் வெளியே போகிறோம் என்று சொல்லியிருக்கலாம். இவர்கள் யாரும் கொடுக்கவில்லை.
டிஜிபி டிரான்ஸ்பர் ஆர்டர் போட்ட அந்த இன்ஸ்பெக்டருக்கு நான் ரிலீவ் ஆர்டர் கொடுக்கவில்லை. காரணம் ஐகோர்ட் உத்தரவு இல்லாமல் யாரையும் ரிலீவ் செய்ய முடியாது.
இதே ஆட்கள் நாளையே அய்யா நான் போகிறேன் என எழுதி கொடுத்தால் அவர் கேஸ் டைரி எழுதிக்கொடுத்து சென்றால் மாலைப்போட்டு அனுப்பி வைப்பேன். நீங்கள் சம்பளம் வாங்கினீர்களே என்ன வேலை செய்தீர்கள் என்று கேட்டீர்களா?
நீங்கள்தான் செயல்படவில்லை என சொல்கிறார்களே?
நான் என்ன கட்டிப்பிடித்துக்கொண்டேனா? நீங்கள் ஒரு போலீஸ் ஆஃபிசர் அதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
எதன் அடிப்படையில் இவர்கள் உங்களுக்கு எதிராக திரும்புகிறார்கள்?
எனக்கு எதிராக திரும்பவில்லை, இது நீதிமன்ற உத்தரவு. அதை எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு பின்னடைவு. மனக்கவலையோடு போலீஸாரை கொடுக்கிறார்கள். திரும்ப விசாரணை நடத்துகிறேன். அவர்கள் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளை கொடுக்கிறார்கள். அதை எதிர்த்து தனிமனிதனாக போரிடுகிறேன்.
நான் தனி மனிதனாக போரிடுகிறேன். இவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் கொடுப்பது அறநிலையத்துறை அல்ல. மக்கள் வரிப்பணம்.
அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைதுக்குப்பின் பின்னர்தான் இந்தப்புகார்கள் வருகிறதா?
கவிதா என ஒரு அறநிலையத்துறை அதிகாரி இருந்தார் அல்லவா? அவரை கைது செய்த பின்னர்தான் அடுத்த நாள்தான் வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை வெளியிடுகிறார்கள்.
ஆதாரமும் ஆவணமும் இல்லாமல் எப்படி எப்.ஐ.ஆர் போடுவது என கேள்வி கேட்டு அதை பெட்டிசனாக டிஜிபியிடம் கொடுத்துள்ளார்கள். வெளியிலும் வந்துள்ளது, இதில் இரண்டு விஷயம் இந்த பெட்டிஷனை கொடுத்தவர்களுக்கு அடிப்படை சட்ட அறிவில்லை. பெட்டிஷனை வாங்கியவர்களுக்கும் கண்டிப்பாக அடிப்படையான சட்ட அறிவு இல்லை.
காரணம் எப்.ஐ.ஆர் குறித்து உச்சநீதிமன்றம் 5 ஜட்ஜ்கள் முடிவாக தீர்ப்பளித்துள்ளார்கள். இதை பொதுவாக சொல்கிறேன். ஒரு எப்.ஐ.ஆரை போடுவதாக இருந்தால் கைது செய்யக்கூடிய தவறை யாராவது செய்தால் ஒரு தகவலைக்கொடுத்தால் அதை உண்மையா? பொய்யா? விசாரிக்கிறதோ, ஆவணத்தைப்பார்ப்பதோ, சாட்சிகளை பார்ப்பதோ சட்டத்தில் இடமில்லை. இதை அனைத்து ஸ்டேஷன்களுக்கும் நான் சொல்கிறேன்.
எங்கள் வழக்கைப்பொறுத்தவரை இது ஸ்பெஷல் யூனிட், தடாலடியாக வழக்கு எல்லாம் போடமாட்டோம். உயர் நீதிமன்றத்தில் ஆர்டர் வரும். நாங்கள் முன் விசாரணை எல்லாம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.