Published : 29 Dec 2018 12:48 PM
Last Updated : 29 Dec 2018 12:48 PM

மின்பாதை விவகாரம்: உழவர்கள் மீது அடக்குமுறையை திணிக்கக் கூடாது: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கண்டனம்

உழவர்களை மிரட்டி சட்டவிரோதமாக மின் கோபுரங்களை அமைக்கும் மத்திய, மாநில அரசுகளின் போக்கு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,

 

''தமிழ்நாட்டில் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் விளைநிலங்களை ஆக்கிரமித்து உயர் அழுத்த மின்கோபுரங்களை அமைப்பதற்கு எதிராக உழவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பொள்ளாச்சி பகுதியில் உழவர்களை மிரட்டி சட்டவிரோதமாக மின்கோபுரங்களை அமைக்கும் பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் இந்த அத்துமீறல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

 

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கும், பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் கொண்டு வருவதற்காக தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களின் வழியாக 16 உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்பாதை திட்டங்களின் பெரும் பகுதி  விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளும், பாதிப்புகளும் எல்லையில்லாதவை. உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைக்கப்படும் பகுதிகளில் 40 முதல் 90 மீட்டர் அகலத்திற்கான நிலங்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த நிலங்களை எதற்காகவும் விவசாயிகள் பயன்படுத்தக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்திற்கு எதிராக உழவர்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும், அந்த போராட்டங்களுக்கு பயன் கிடைக்காத நிலையில், உயரழுத்த மின்கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் பல இடங்களில் தொடந்து 13-ஆவது நாளாக இன்றும் காத்திருப்புப் போராட்டத்தில் உழவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி, இதுதொடர்பாக உழவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், உழவர்களுடன் பேச்சு நடத்த முன்வராத தமிழக அரசு, இறுதி ஆயுதமாக விவசாயிகள் மீது கடுமையான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

 

உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு எதிராக உழவர்கள் ஒருபுறம் போராட்டம் நடத்தி வரும் நிலையில், மற்றொரு புறம் கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த புரவிப்பாளையம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உழவர்களுக்கு சொந்தமான விளைநிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, உயரழுத்த மின் கோபுரங்களை அமைக்கும் பணியை மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் நிறுவனம் தொடங்கி உள்ளது. அந்த நிறுவனத்திற்கு ஆதரவாக தமிழக அரசு அதிகாரிகளும், காவல்துறையினர் அப்பாவி உழவர்களை மிரட்டிப் பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

தங்களின் நிலத்தில் மின் கோபுரம் அமைக்க ஒப்புதல் அளிப்பதாக ஒரு பத்திரத்தில் எழுதி  கொடுக்கும்படி உழவர்கள் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். ஒப்புதல் அளிக்க மறுத்தாலோ, மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளை எதிர்த்தாலோ  உழவர்களை கைது செய்து சிறையில் அடைப்போம் என்று உழவர்களை காவல்துறை மிரட்டியுள்ளது.

 

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் கொண்டு வர மின்பாதைகள் தேவை என்பதையோ, அத்தகைய பாதைகள் இல்லாவிட்டால் தமிழகத்திற்கு மின்சாரம் கிடைக்காது என்பதையோ பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் அமைப்புகளும் அறியாதவர்கள் அல்ல. அதனால், இத்தகைய மின்பாதைகளை அமைப்பது தவிர்க்க முடியாது என்று தமிழக அரசு மீண்டும், மீண்டும் கூறத் தேவையில்லை. இந்த மின்பாதைகளை விளைநிலங்களை ஆக்கிரமித்துத்தான் அமைக்க வேண்டுமா... நிலத்திற்கு அடியில் அமைக்க முடியாதா? என்பதுதான் பா.ம.க.வின் வினா.

 

கேரளத்தில் மாநிலத்தைக் கடந்து செல்லும் மின்பாதைகளாக இருந்தாலும், எரிவாயுக் குழாய் பாதையாக இருந்தாலும் நெடுஞ்சாலைகளையொட்டி நிலத்தடியில் தான் அமைக்கப்படுகின்றன. அதற்கு சற்று கூடுதலாக செலவாகும் என்றாலும் கூட அதுதான் மிகவும் பாதுகாப்பானதும், பராமரிக்க எளிதானதும் ஆகும். ஆனால், இந்த உண்மையை உணர்ந்து கொள்ள தமிழக அரசு மறுப்பது ஏன்? என்பதுதான் புரியவில்லை. தமிழகத்திற்கு மின்பாதைகள் எந்த அளவுக்கு அவசியமோ, அதைவிடப் பல மடங்கு விவசாயம் அவசியமாகும். எனவே, இனியும் உழவர்கள் மீது அடக்குமுறையைத் திணிக்கக்கூடாது.

 

பொள்ளாச்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்பாதைகள் அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மின்பாதைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும்  உழவர்களை தமிழக அரசு உட்னடியாக அழைத்துப் பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x